» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வ.உ.சிதம்பரனார் சனாதன தர்மத்தை பின்பற்றினார் : நெல்லையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

புதன் 29, ஜனவரி 2025 8:54:36 AM (IST)



சனாதன தர்மத்தை பின்பற்றி சுதேசி இயக்கத்தை விஷ்ணுவின் அவதாரம் என வ.உ.சி. அழைத்தார்’ என்று நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நெல்லை மண் வீரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாக போராடிய ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்.

அதில், வ.உ.சிதம்பரனார் சுதேசி இயக்கத்தை தொடங்கி நாடு முழுவதும் சுதந்திர போராட்டத்தை எதிரொலிக்க செய்யும் வகையில் சுதேசி கப்பலை விட்டார். இதனால் சுதேசி இயக்கம் நாடு முழுவதும் பரவியது. அந்த சமயத்தில் சென்னையில் நடந்த கூட்டத்தில் வ.உ.சி. பேசும் போது, சுதேசி இயக்கம் விஷ்ணுவின் அவதாரம். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அவர் சனாதன தர்மத்தை பின்பற்றி தான் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறினார்.

இதேபோல் ஆங்கிலேயர்களை எதிர்த்த வாஞ்சிநாதன், ஆங்கிலேய ஆட்சியாளரை சுட்டுக்கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்டார். மகாகவி பாரதியார் தனது பாடல்கள் மூலம் சுதந்திர உணர்வை ஊட்டினார்.

தற்போது உள்ள இளைஞர்கள் நாட்டின் வரலாற்றையும், அதன் பாரம்பரியத்தையும் உணர வேண்டும். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தது. 2014-ம் ஆண்டில் 16-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடிக்கும். 2047-ம் ஆண்டு தன்னிறைவு பெற்ற நாடாக மாறியிருக்கும்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆராய்ச்சிகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவதில் புதிய ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

2020-ம் ஆண்டில் இந்தியாவில் 22 ஆயிரம் அறிவுசார் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் 0.5 சதவீதமாகும். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.

மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நமது தொழில்நுட்ப வளர்ச்சி இருக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட ரோபோடிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு ஏற்ப நாம் தொழில்நுட்பத்தில் வளர வேண்டும்.

1788-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து மெக்காலே தலைமையில் பேராசிரியர் குழு இந்தியாவிற்கு வந்து ஆய்வு செய்தது. இந்துக்களின் பாரம்பரியம், அறிவுசார் சொத்து உள்ளிட்டவற்றை கண்டறிந்து சேகரித்து மொழி பெயர்ப்பு செய்ய ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிந்துரை செய்தது. இதில் இந்தியா செழுமையாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த மோசே கூறிய அறிவுசார் தகவல்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு கூறப்பட்டவை ஆகும். எனவே, நாம் நம்முடைய பாரம்பரியத்தை பற்றி பெருமைப்பட வேண்டும். நமது அடையாளத்தையும், தனித்தன்மையையும், ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டனர்.

கொரோனா காலத்தில் உலக நாடுகள் எல்லாம் தடுப்பூசிகளை கண்டுபிடித்து வியாபாரத்திற்காக பயன்படுத்தினார்கள். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான நமது நாடு, நமது அறிவுசார் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தடுப்பூசிகளை தயாரித்து பிற நாடுகளுக்கும் கொடுத்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்தது. தற்போது உலகத்திற்கே வெளிச்சம் கொடுக்கும் வகையில் இந்தியாவின் அறிவுசார் சொத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory