» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் 8-வது பொருநை புத்தக திருவிழா தொடங்கியது!

வெள்ளி 31, ஜனவரி 2025 5:49:57 PM (IST)



திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களால் எழுதப்பட்ட "கதை சொல்லப் போறாம்” சிறுகதை புத்தகமும், பள்ளி ஆசிரியர்களால் எழுதப்பட்ட "உங்களுடன் ஐந்தே நிமிடம்” புத்தகம் என 4 புத்தக வெளியிட்டுடன் நெல்லை பொருநை 8-வது புத்தகத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது

திருநெல்வேலி மாவட்டம், நெல்லை வர்த்தக மையத்தில் இன்று (31.01.2025) பொருநை விழா 8-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் வண்ணதாசன், மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் என்.சந்திரசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.. 

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்ததாவது: கடந்த ஆண்டில் தமிழ் இலக்கிய உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அமைந்த "நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டு சிறுகதைகள்” மற்றும் "நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கவிதைகள் கட்டுரைகள்”, வெளியிடப்பட்டுள்ளது. 

இன்றையதினம் நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டு கட்டுரைகள், "நெல்லைச் சீமையின் நாட்டார் நிகழ்த்துக் கலைகள்” ஆகிய தொகுப்புகளும், "அன்பாடும் முன்றில்” திட்ட செயல்பாட்டில் பள்ளி ஆசிரியர்களால் எழுதப்பட்ட ”உங்களுடன் ஐந்தே நிமிடம்” மற்றும் பள்ளி மாணவர்களால் எழுதப்பட்ட ”கதை சொல்லப் போறோம்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் என 4 புத்தகங்கள் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இரும்பின் நாகரிகம், தமிழகத்திலிருந்து தான் தொடங்கியது என உலகிற்கு எடுத்துரைத்தார்கள். இரும்பின் பயன்பாடு எங்கே தொடங்கியது என்று உலகிற்கே ஒரு முன்னோடி ஆய்வை தொல்லியல் வல்லுநர்கள் அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கியுள்ளார்கள். இரும்பு எங்கு தொடங்கியது என்றால் பொருநை நதிக்கரையில் சிவகளையில் தொடங்கியது என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். 

கீழடியும், வைகை நதி மயிலாடும் பாறை மற்றும் நெல்லை பொருநை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையான, தொன்மையானதாகும்.  ஐந்திணை சிறப்பு வாய்ந்த பொருநை சூழ்நிலையில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், கலைகள், பண்பாட்டின் சிறப்புகள் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீரை குடித்து வளர்ந்த சீமையின் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் நிறைந்துள்ளது நமது நெல்லை சீமையாகும். 

சந்திரனுக்கு விடப்படும் ராக்கெட்டுக்கான எரிபொருள் மகேந்திரகிரியிலிருந்து செல்கிறது. தமிழ்நாட்டின் பசுமை மின்உற்பத்தி தலைநகரமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக மிகப்பெரிய தொழிற்சாலை சோலார்பேனல் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு வார காலத்திற்குள் திறந்து வைக்கவுள்ளார்கள். மின்சாதனங்கள் உற்பத்திக்கான உலகத்திலேயே நவீனநுட்பமான செல்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலைசெய்யும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நீவன தொழில்நுட்பங்களை கற்பதற்காக மூன்று மாதம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதில் 1260 மகளிர்கள் நெல்லையிலிருந்து வேலைக்கு சென்றுள்ளார்கள். 

ஐந்திணையும், பொருநையும், இலக்கிய செழுமை, பண்பாட்டின் பெருமை, கலைகள், எழுத்து சாகித்ய எழுத்தாளர்கள் என நெல்லையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்பதற்காகவும், இளைய தலைமுறையினர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்பதற்கான முயற்சி நெல்லை பொருநை 8-வது புத்தக திருவிழா. 

இந்த புத்தக திருவிழாவில், 120-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளும், பழங்காலப்பொருட்களின் கண்காட்சி, அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி, செயற்கை நுண்ணறிவு கண்காட்சி, கலை இலக்கியப் போட்டிகள் பாரம்பரிய உணவகங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கங்களும், பத்திரிக்கையாளர்களின் புகைப்படக் கண்காட்சி அரங்கம் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இப்புத்தகத்திருவிழாவில் தினமும் இலக்கிய ஆளுமைகளின் சொற்பொழிவுகளும் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், இசை மன்றம் ஆகியவையும் நடத்தப்படவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும், கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிப் பட்டறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிற்ப பயிலரங்கம், இதழியல் பயிற்சிப்பட்டறைகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பயிலரங்கம் ஆகியவை நடைபெறுகிறது.

பொருநை புத்தக திருவிழாவினை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களிலும் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்கும் கலை விழாக்கள் மூலம் புத்தக திருவிழாவிற்கு அழைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 9 மாதங்களாக வாசகர் வட்டங்கள் 49 கல்லூரிகளில் உருவாக்கப்பட்டு, மாணவர்களிடையே வாசிக்கும் திறனை ஊக்குவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு பொருளாதார உதவியை செய்ய வேண்டுமென்ற நோக்கில் சொந்த சேமிப்பு புத்தக உண்டியல் தன்னார்வலர்கள் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சுமார் 6 இலட்சம் மதிப்பிலான புத்தக கூப்பன்கள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக திருவிழாவில் சுமார் 2 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, திட்ட இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி முகமை) சரவணன், (மகளிர் திட்டம்) இலக்குவன், எழுத்தாளர்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory