» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மூணாறு அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவ-மாணவிகள் 3 பேர் பலி
புதன் 19, பிப்ரவரி 2025 5:18:49 PM (IST)

மூணாறு பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நாகர்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 3பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படிக்கும் 34 மாணவ-மாணவிகள் மற்றும் 3 பேராசிரியர்கள் என 37 பேர் ஒரு பஸ்சில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அந்த பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த வினிஷ் (41) என்பவர் ஓட்டினார். மூணாறில் உள்ள சுற்றுலா இடங்களை ஒவ்வொன்றாக மாணவ-மாணவிகள் சுற்றி பார்த்தனர். அதைத்தொடர்ந்து மூணாறு அருகே வட்டவடை பகுதியை பார்வையிடுவதற்காக பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
மூணாறு-மாட்டுப்பட்டி மலைப்பாதையில், எக்கோ பாயிண்ட் பகுதியில் சுற்றுலா பஸ் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. சாலை வளைவில் வந்தபோது பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் வந்த மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என அபயகுரல் எழுப்பினர்.
இதையடுத்து அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும், அப்பகுதி பொதுமக்களும் சேர்ந்து பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மூணாறு போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளையும், ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து பஸ்சுக்குள் சிக்கியவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.
இருப்பினும் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய நாகர்கோவில் அருகே உள்ள அஞ்சுகிராமம் கனகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் மகள் வேனிகா (19), திங்கள்சந்தையை அடுத்த மாங்குழி பகுதியை சேர்ந்த ராமு மகள் ஆத்திகா (18) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் மாணவ-மாணவிகள் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர்.
பின்னர் அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மூணாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதன் (19) என்ற மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலைப்பாதையில் பஸ் அதிவேகமாக சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதற்கிடையே சுற்றுலா பஸ் கவிழ்ந்ததும், அதனை ஓட்டி வந்த வினிஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவர் மூணாறு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)
