» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்: டிஐஜி சரவணன் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 8:24:46 AM (IST)
திருநெல்வேலி சரகத்தின் புதிய காவல்துறை துணைத் தலைவராக (டிஐஜி) சரவணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பினை நிர்வகிக்கும் வகையில், புதிய டிஐஜி-யாக சரவணன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது : நான்கு மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கை அமைதியான முறையில் பராமரிப்பதே எனது முதன்மையான கடமை. குறிப்பாக, வரவிருக்கும் தேர்தல்கள் எவ்வித அசம்பாவிதமும் இன்றி, மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்படும்.
மாவட்டங்களில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வழக்கிலும் தாமதமின்றி விரைவாகப் புலனாய்வு முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை (Final Report) தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்வோம். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை விரைவாகப் பெற்றுத் தர வழிவகை செய்யப்படும்.
தென் மாவட்டங்களில் சாதிய மோதல்கள் கடந்த காலத்தை விடக் குறைந்திருந்தாலும், அதனை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சாதிய பாகுபாடுகள் இல்லாத நிலையை உருவாக்கவும், சமூக நல்லிணக்கத்தை வளர்க்கவும் காவல் அதிகாரிகள் மூலம் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
சமூக வலைதளங்கள் வாயிலாகச் சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகளைப் பரப்புபவர்கள் அல்லது சாதிய, மத மோதல்களைத் தூண்டுபவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமுமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் அதிகாரிகள் மீது வரும் புகார்கள் மற்றும் மனித உரிமை ஆணையம் பரிந்துரைக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை முறையாக ஆய்வு செய்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக உள்ளேன். நான்கு மாவட்ட மக்களும் எவ்வித பயமுமின்றி வாழத் தேவையான பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதே தனது இலக்கு என்று டிஐஜி சரவணன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:13:41 AM (IST)

பொருநை அருங்காட்சியகம்: நிதிஅமைச்சருக்கு சென்னை வாழ் நெல்லை மக்கள் பாராட்டு
வெள்ளி 2, ஜனவரி 2026 8:30:06 AM (IST)

நெல்லை, குமரி மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!
வியாழன் 1, ஜனவரி 2026 12:35:05 PM (IST)

அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம்!
புதன் 31, டிசம்பர் 2025 12:19:33 PM (IST)

நெல்லை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.2 இலட்சம் நன்கொடை!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:15:31 PM (IST)


