» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!

செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

இட்டமொழி மற்றும் மிட்டதார்குளம் பகுதிகளில் மின் மாற்றிகளைத் திருடிச் சென்ற கும்பலைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட இட்டமொழி பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மின்சார கம்பிகளை வெட்டிவிட்டு, அங்கிருந்த 2 மின் மாற்றிகளை வாகனத்தில் ஏற்றித் திருடிச் சென்றனர். இதேபோல் மிட்டதார்குளம் பகுதியிலும் 2 மின் மாற்றிகள் திருடு போயின.

இதுகுறித்து இட்டமொழி இளநிலை மின்வாரிய பொறியாளர் சங்கீதா அளித்த புகாரின் பேரில், திசையன்விளை காவல் ஆய்வாளர் எழில் சுரேஷ் சிங் தலைமையில், உதவி ஆய்வாளர் அபினேஷ் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

போலீசாரின் தீவிர விசாரணையில், திருச்செந்தூர் அருகே கல்லாமொழி பகுதியைச் சேர்ந்த டிம்பர் லாரி ஓட்டுநர் அந்தோணி ராபர்ட் (35) மற்றும் அவரது நண்பர்களான பாஸ்கர் (37), ஆத்திச்செல்வன் (32), கண்ணன் (40) ஆகியோர் இந்தத் துணிகர திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் நள்ளிரவு நேரங்களில் மின் மாற்றிகளைக் கழற்றி லாரியில் ஏற்றிச் சென்று, திருச்செந்தூரில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், விற்பனை செய்யப்பட்ட 4 மின் மாற்றிகளையும் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory