» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் பெண் உட்பட 11 பேர் கைது: 2பேருக்கு கை முறிவு!

செவ்வாய் 7, ஜூலை 2026 11:20:29 AM (IST)

MurderFracture.jpg

வீரவநல்லூர் அருகே மூலச்சி இரட்டைக் கொலை வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோட முயன்ற 2 குற்றவாளிகளுக்குக் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, கடந்த 2-ஆம் தேதி மாலையில் தனது மகன்கள் சின்னதுரை (15), ஜெயராஜ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்புரத்தில் இருந்து மூலச்சிக்குச் சென்று கொண்டிருந்தார். மாதுடையார்குளம் பகுதியில் சென்றபோது, பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் பதுங்கியிருந்த மர்ம கும்பல் ஒன்று தங்களது காரைக் காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதவிட்டது. 

இந்த விபத்தில் 5 வயதுச் சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயமடைந்த காளிமுத்துவை அந்த கும்பல் கொடூரமாகத் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்தது. மற்றொரு மகன் சின்னதுரை படுகாயங்களுடன் தப்பினார். இச்சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். 

முதற்கட்டமாக மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மகேஷ் (29), குமார் என்ற கொக்கி குமார் (23), மணிகண்டன் (30), ராஜதுரை (30), முத்துபட்டன் (40), மகாலிங்கம் (24) மற்றும் ஊர்காடு பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் (29) ஆகிய 7 பேரைக் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலையின் சதித்திட்டத்தில் பங்கேற்ற முக்கியக் குற்றவாளி மாடசாமியின் மனைவி விஜயா (37) மற்றும் ஒரு 17 வயதுச் சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன் (29) என்பவரைப் பிடிக்கப் போலீசார் நேற்று 80 அடி கால்வாய் பகுதிக்குச் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த கிருஷ்ணன், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதேபோல், கொலையின் முக்கியக் குற்றவாளியான மகேஷ் என்ற மாடசாமி (36) கொழுந்துமாமலை முருகன் கோவில் அருகே பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் மாடசாமி பாறைகளில் ஏறி தப்பியோட முயன்றார். 

அப்போது கீழே விழுந்ததில் அவரது கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. காயம் அடைந்த இரு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து, நெல்லை அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை வழக்கின் எதிரொலியாக மூலச்சி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory