» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித் தபசுத் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்!
திங்கள் 27, ஜூலை 2026 8:01:44 AM (IST)

சங்கரன்கோவிலில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், ஆடித் தபசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடித் தபசுத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாள் வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவின் 9-ஆம் திருநாளான நேற்று, சிறப்பு அலங்காரத்தில் கோமதி அம்பாள் தேரில் எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு நிலையிலிருந்து புறப்பட்ட தேர், பக்தி கோஷங்கள் முழங்க ரத வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. தென்காசி மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திரண்ட பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, பகல் 11.15 மணிக்குத் தேர் நிலையை வந்தடைந்தது.
இத்தேரோட்ட நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பாதுகாப்புப் பணியில் தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் கூடுதல் துணைச் கண்காணிப்பாளர்கள் ஜூலியஸ் சீசர், சங்கர், செங்குட்டு வேலவன், நமச்சிவாயம் மற்றும் காவலர்கள் ஈடுபட்டனர்.
திருவிழாவின் சிகர நிகழ்வான ஆடித் தபசு காட்சி 11-ஆம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. அன்று காலை சுவாமி மற்றும் அம்பாளுக்குக் கும்பாபிஷேகமும், காலை 8.30 மணிக்குச் சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவமூர்த்திக்குச் சிறப்பு அபிஷேகமும், 9.30 மணிக்குக் கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரமும் நடைபெறும்.
பகல் 12 மணிக்குக் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறார். மாலை 6.05 மணிக்குச் சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்குத் தபசு காட்சி அளிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, இரவு 11.45 மணிக்குச் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் தேர்வு!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:13:09 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? – அன்புமணி கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 11:25:26 AM (IST)

நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)


