» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துப்பாக்கிச்சூடு வழக்கு: 3 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தகவல்!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 8:35:58 AM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் செயல்பட்டோம் எனக்கூறி, குற்றத்தில் தொடர்புடையவர்கள் தப்பிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், அவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காரசாரமாக வாதாடினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வாதம்: மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணன், ஒரே ஒரு காவல் ஆய்வாளர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், "மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான் செயல்பட்டோம், எனவே எங்களுக்குத் தொடர்பில்லை எனக் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கூறும் கருத்துகளை ஏற்கக் கூடாது. இதில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என வாதாடினார்.

அரசு தரப்பு விளக்கம்: அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இச்சம்பவம் தொடர்பாக 3 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து

naan thaanAug 15, 2026 - 11:51:35 AM | Posted IP 172.7*****

2018 மே மாசம் நடந்த நிகழ்வுக்கு இன்று 2026 ஒழுங்கு எடுப்பது கேவலமான ஒரு கால தாமதமான செயல்பாடு ... நீதி மறுக்கப்படுவதை விட கீழ்தரமானது அது தாமதிக்கப்படுவது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்த அணில் அரசு அமைந்த வுடன் முதலில் வாழ்த்து தெரிவித்தது அணில் அகர்வால் தானே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory