» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காமநாயக்கன்பட்டியில் பரலோக மாதா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 9:31:05 AM (IST)

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில், விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட தேர் பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதா தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டில் கடந்த 6-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருவிழா கொடியேற்றப்பட்டது.
திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணியளவில் மறையுரை சிந்தனை மற்றும் நற்செய்தி வழங்கப்பட்டது. கடந்த 9-ஆம் தேதி காலை 8 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரை சிந்தனை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பங்கு பேரவை உறுப்பினர்கள், வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் சார்பில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.
முக்கிய விழாவான நேற்று அதிகாலை 2 மணியளவில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி, பாளை மறைமாவட்ட நிர்வாகி பேரருட் தந்தை மோட்சராஜன் ஆகியோர் தலைமையில் தேரடி திருப்பலியும், பரலோக மாதா மற்றும் விண்ணரசி மாதா தேர்களில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தேருக்கு பூக்கள் தூவியும், தேருக்கு பின்னால் கும்பிடு சேவை நிகழ்த்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் கோவில் வளாகத்தில் மெழுகு திரி ஏற்றி உருக்கமாக பிரார்த்தனை செய்தனர்.
காலை 6 மணி மற்றும் 8 மணிக்கு பங்குத்தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வரும் இறைமக்களின் வசதிக்காக நேற்று மதியம் 12 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், பிற்பகல் 2 மணியளவில் மலையாளத்தில் திருப்பலியும், மாலை 4 மணியளவில் இந்தியில் திருப்பலியும், இரவு 7 மணியளவில் திருப்பலி மற்றும் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்தனர். விழாவிற்காக சென்னை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, ராஜபாளையம் சிவகாசி, விருதுநகர், மதுரை கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த இறைமக்கள் மற்றும் ஆலய திருத்தல அதிபர் மோயீசன், உதவி பங்குத்தந்தை மரிய ஜோமிக்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)


