» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.7½ கோடி மோசடி : மதிப்பீட்டாளர், நகைக்கடை அதிபர் கைது
சனி 2, மார்ச் 2024 8:51:13 AM (IST)
சிவகாசியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் தங்கம் எனக்கூறி 15 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.7½ கோடி மோசடி செய்த விவகாரத்தில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் மற்றும் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தவர் என 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் அருகே காந்தி ரோட்டில் அரசு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வங்கியின் மண்டல மேலாளர் ரஞ்சித் (வயது 45), சில நாட்களுக்கு முன்பு வழக்கமான ஆய்வுக்காக அந்த வங்கிக்கு வந்தார்.
வங்கியில் இருந்த பதிவேடுகளை சரிபார்த்த அவர், அதை தொடர்ந்து நகைக்கடன் பிரிவுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அடகு நகைகளின் தரத்தையும் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு ஒரு நகையின் மீது சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த நகையின் தரத்தை பரிசோதித்தபோது, அது போலியான நகை என தெரியவந்தது. இதை தொடர்ந்து வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளையும் அதிகாரி ரஞ்சித் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
இதில் வங்கி பெட்டகத்தில் இருந்த 15 கிலோ 427 கிராம் நகைகள், அதாவது 1,928 பவுன் அளவுக்கு போலியான நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் வந்து விசாரித்ததில், 56 பேர் 126 கடன்கள் மூலம் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 509 பெற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து வங்கி அதிகாரிகள், சிவகாசி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலி நகைகளை வைத்து கடன் பெற்ற 56 பேர் குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர்.
இதில் வங்கி நகை மதிப்பீட்டாளர் முத்துமணி (39) உதவியுடன் இந்த மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தனது கூட்டாளியான தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பாலசுந்தரம் (41) என்பவர் கூறியதன் பேரில் போலி நகைகளுக்கு வங்கிக்கடன் அனுமதி அளித்ததும் தெரியவந்தது.
பாலசுந்தரம் சிவகாசியில் அந்த வங்கி இருக்கும் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். உடனே பாலசுந்தரத்தையும் போலீசார் கைது செய்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலசுந்தரம் கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி பஸ் நிலையம் அருகில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் தனக்கு பணம் தேவைப்படும் போது கடையில் இதற்காகவே தயார் செய்து வைத்திருந்த போலி நகைகளை தனக்கு வேண்டிய நபர்களின் பெயரில் அந்த வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அடகு வைத்த நகைகளுக்குரிய உரிய வட்டியை தவறாமல் கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாலசுந்தரம் எப்போது யாரை அழைத்து வந்தாலும் அவர்கள் கொடுக்கும் நகைகளை பெற்றுக்கொண்டு வங்கி சார்பில் கடன் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபட்ட அவர், வங்கியில் இருந்து பெற்ற ரூ.7 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 509-யை என்ன செய்தார் என்பது மர்மமாக உள்ளது.
இவ்வளவு பெரிய மோசடிக்கு பின்புலத்தில் வேறு யாராவது இருந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தங்கலில் உள்ள ஒரு வங்கியில் போலி நகைகளை கொடுத்து ஒருவர் பணம் பெற்று சென்றதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புதன் 26, மார்ச் 2025 5:16:05 PM (IST)

அமித்ஷா உடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 26, மார்ச் 2025 5:06:29 PM (IST)

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்!
புதன் 26, மார்ச் 2025 5:01:56 PM (IST)

சென்னையில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
புதன் 26, மார்ச் 2025 10:43:33 AM (IST)

தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 26, மார்ச் 2025 10:26:51 AM (IST)

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
புதன் 26, மார்ச் 2025 8:06:49 AM (IST)
