» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனவு இல்லம் திட்டத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் கடன் வழங்க கோரிக்கை

சனி 13, ஜூலை 2024 4:54:02 PM (IST)



கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு கூட்டுறவு வீடடு வசதி சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்று ஊழியர் சங்க மத்தியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேசன் சார்பில், மாநில மத்திய குழுக்கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். தர்மபுரி மாவட்ட தலைவர் கே.முருகேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தமிழக அரசின் ‘கனவு இல்லம்’ திட்டத்தின் மூலம், 6 ஆண்டுகளில், 8 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு, தலா ரூ. 3.10 லட்சம் மதிப்பில், கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. இந்த திட்ட மதிப்பீட்டுக்கு அதிகமாக செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகளுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என அசு அறிவித்துள்ளது.

ஆனால், இதுபோன்ற அரசின் திட்டங்களுக்கு, பயனாளிகளை தேர்வு செய்வதிலும், நீண்டகால வீட்டுவசதி கடன்கள் வழங்குவதிலும் நீண்ட நெடிய அனுபவம் உள்ள பணியாளர்களை கொண்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களால் மட்டுமே மிகப்பெரிய எண்ணிக்கையிலான பயனாளிகளை தேர்வு செய்யவும், கடன் பெறும் தகுதியை கண்டறியவும் முடியும். அதனால், இத்திட்டத்தை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களிடம் ஒப்படைத்தால், உரிய காலத்தில் இலக்கை முடித்து, நலிவடைந்துள்ள வீட்டு வசதி சங்கங்கள் புத்துயிர் பெறும். இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அரசால் அறிவிக்கப்பட்ட பல்வேறு தள்ளுபடி திட்டங்களால் நலிவடைந்துள்ள வீட்டுவசதி சங்கங்களுக்கு, தமிழக அரசு, தலா ரூ. ஒரு கோடி வீதம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். நலிவடைந்த மற்றும் கலைக்கப்பட்ட வீட்டுவசதி சங்கங்களின், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சொத்துகளை மீட்டு, சங்கத்தின் வளர்ச்சிக்கும், பணியாளர்கள் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும். 2001 முதல், 25 ஆண்டுகளாக, தமிழக அரசு அறிவித்த பல்வேறு தள்ளுபடி திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளாத கடன்தாரர்களுக்கு, இறுதி வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஆண்டு தோறும் அரசுத்துறை நிறுவனங்களக்கு இணையாக கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2023ம் ஆண்டு, தீபாவளிக்கு, அரசுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. ஆனால், கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது. கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள, 10 சதவீதம் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், நடப்பு ஆண்டு தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பவை உள்ள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

BHUVANESHWARI KARUNAGARANOct 28, 2024 - 11:24:37 AM | Posted IP 162.1*****

Salem District Weaver We want a house

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory