» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயில் சேவை : மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

சனி 20, ஜூலை 2024 8:50:39 AM (IST)



மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாரத்திற்கு 2 முறை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில் போத்தனூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களின் சேவை தொடக்க விழா நேற்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதையொட்டி 2 ரயில்களும் வண்ண மலர்கள், பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர்எல்.முருகன் கலந்து கொண்டு ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது தொடங்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயில் சேவையின் மூலம் ஊட்டியில் இருந்து வருகின்ற தேயிலை, மலைக்காய்கறிகள், மேட்டுப்பாளையம் காய்கறிகள், சிறுமுகையில் தயாரிக்கப்படும் பட்டுகள், கோவையில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்கள், உள்ளூரில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருள்கள் போன்றவைகளை ஏற்றுமதிக்கு நாம் விரைவாக தூத்துக்குடிக்கு அனுப்ப முடியும். 

அங்கிருந்து கடல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். மக்களின் வரவேற்பை பொறுத்து இந்த ரயில் தினசரி ரயிலாக கூட இயக்கப்படும். தேர்தல் நேரத்தில் நான் வாக்குறுதி அளித்தபடி கோவை-மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் அமைக்க மத்திய ரயில்வே மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். ஊட்டி மலைரயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தில் 75 ரயில் நிலையங்களில் பணி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.800 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில் நிலையம், பாம்பன் பாலம் வேலை முடிவடையும் நிலையில் இருக்கிறது. கோவை, திருச்சி, மதுரை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்கள் பெரியளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

எந்தெந்த நாட்களில் இயக்கப்படும்

மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயில் வாரத்தில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, 8.40 மணிக்கு கோவைக்கு வரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலையில் 4.20 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் வாரத்தில் வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் வரும். இந்த வாராந்திர ரயில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சந்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


மக்கள் கருத்து

H. முஹம்மது அலிJul 21, 2024 - 07:49:15 PM | Posted IP 172.7*****

போத்தனூர் ஸ்டேஷனில் நிறுத்தம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி.

H. முஹம்மது அலிJul 21, 2024 - 07:48:12 PM | Posted IP 172.7*****

போத்தனூர் ஸ்டேஷனில் நிறுத்தம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி.

கதிரேசன்Jul 21, 2024 - 12:13:50 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி இரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் கோவில் வாசல் வரை அரசு மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்பட வேண்டும். மேட்டுபாளையபாளையம் கோவை பொள்ளாச்சி இ பகுதியில் பேருந்து வசதி பற்றி விளம்பரம் செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக வெற்றி பெறும்.

VinothJul 20, 2024 - 09:36:22 PM | Posted IP 172.7*****

Covai metro enna aachu

DurgadeviJul 20, 2024 - 08:54:49 PM | Posted IP 162.1*****

தினசரி ரயிலாக இயக்க பொதுமக்கள் பயணித்து ஒத்துழைக்க வேண்டும்

ஓட்டு போட்ட முட்டாள்Jul 20, 2024 - 08:53:33 PM | Posted IP 172.7*****

இன்னும் கொஞ்ச நாட்களில் கண்ணுமுழிக்கு கிடைத்த வெற்றி என்று கொத்தடிமைகள் கூற வருவார்கள்.

M.periasamy... TUTICORIN port trustJul 20, 2024 - 04:26:53 PM | Posted IP 172.7*****

மேட்டுப்பாளையம் to Ooty மலை ரயிலை பிடிக்க ஏதுவாக நேரம் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்....m.பெரியசாமி தூத்துக்குடி துறைமுகம்... Thoothukudi...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory