» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தலைதீபாவளிக்கு வந்த புதுப்பெண் குத்திக்கொலை: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

சனி 2, நவம்பர் 2024 8:53:23 AM (IST)

உடன்குடியில் தலைதீபாவளிக்கு வந்த புதுப்பெண்ணை  குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையைச் சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் கோவிந்தன் (21). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சாதரக்கோன்விளைக்கு வந்து கோவிந்தனிடம் முகவரி கேட்டார். 

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முகவரி கேட்ட வாலிபரை கோவிந்தன் சத்தம் போட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபர் படுக்கப்பத்தில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்களுடன் சாதரக்கோன்விளையில் உள்ள கோவிந்தனின் வீட்டுக்கு வந்தார். அப்போது கோவிந்தன் வீட்டில் இல்லை, அவருடைய குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். இதனால் படுக்கப்பத்தில் இருந்து வந்தவர்கள் திரும்பி சென்றனர்.

தொடர்ந்து நேற்று காலையில் படுக்கப்பத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் சாதரக்கோன்விளைக்கு வந்தனர். அப்போது சாதரக்கோன்விளையைச் சேர்ந்த போர்வெல் அமைக்கும் தொழில் செய்து வரும் பெருமாள் மகன் மணிகண்டனை (40) சமரசம் பேசுவதற்காக அழைத்து வந்தனர்.

கோவிந்தன், அவருடைய தந்தை சிவன் ஆகியோரை வரவழைத்து மணிகண்டன் சமரசம் பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், சிவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து மணிகண்டனை வெட்டினார். இதனால் சமரசம் பேச வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

படுகாயமடைந்த மணிகண்டனை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து கோவிந்தன், சிவன் ஆகியோர் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். கோவிந்தனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமிக்கும் (19), அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்துவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தலைதீபாவளி கொண்டாடுவதற்காக முத்துலட்சுமி கணவருடன் சாதரக்கோன்விளையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் நேற்று மாலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் வினியோகம் செய்வதற்காக முத்துலட்சுமி சென்றார். அப்போது அங்கு வந்த மணிகண்டனின் தம்பியான தாஸ் என்ற வாலிபர் முத்துலட்சுமியை ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தாஸை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory