» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராமதாஸ் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!
செவ்வாய் 26, நவம்பர் 2024 4:09:48 PM (IST)
பா.ம.க. தலைவர் ராமதாஸ் குறித்து பேசியதை திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவிக்க வேண்டுமென தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் ஒங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும், சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை செய்து வருகிற ராமதாஸ் அவர்களை சிறுமைப்படுத்தும் வகையிலான முதல்-அமைச்சர் ஸ்டாலினது அலட்சியப்பேச்சு அரசியல் அநாகரீகமாகும்.
முதல்-அமைச்சர் ஸ்டாலினின் திடீர் கோபத்திற்குக் காரணமென்ன? அடிப்படை இல்லாது ஏதாவது கேட்டாரா ஐயா ராமதாசு? அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்ட விவகாரத்தில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாகப் பதற்றமடைவதேன்? இயல்பான கேள்விக்கு இவ்வளவு சீற்றம் எதற்காக? அதானியைச் சந்தித்தீர்களா? எனும் கேள்விக்கு, 'ஆம்! இல்லை!' எனும் பதிலைக் கூறாது, 'அவருக்கு வேறு வேலையில்லை' எனக் கூறி வசைபாடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகுதானா?
பதில் சொல்ல நேர்மையற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கேள்வி கேட்ட ராமதாஸ் அவர்களை நோக்கி, 'வேலையில்லை' எனப் பாய்வது அரசியல் அறம்தானா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது எண்ணற்ற அறிக்கைகளை விடுத்தாரே ஸ்டாலின், அப்போது வேலையில்லாதுதான் அறிக்கைகளை விடுத்தாரா? "எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்" எனக் கேட்டாரே, அப்போது வேலையில்லாதுதான் அரசியல் செய்தாரா?
அதானி குழுமம் லஞ்சம் கொடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் இப்போதுவரை வாய்திறக்க மறுப்பதேன்? அதானி லஞ்சம் கொடுத்தாரெனும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா? இல்லை! மறுக்கிறீர்களா? ஏற்கிறீர்களென்றால், அதானி குழுமத்திடமிருந்து தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கியது யார்? பதில் சொல்லுங்கள் முதல்-அமைச்சரே! ராமதாஸ் அவர்கள் கூறியதுபோல, அதானியை ரகசியமாக இல்லத்தில் சந்திக்க வேண்டிய தேவையென்ன வந்தது?
"அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் ஏதும் கடந்த மூன்று ஆண்டுகளில் போடவில்லை" என விளக்கம் கொடுக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் போட்டதாக யாருமே கூறவில்லையே! இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி மையத்திடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டதே, அதானி குழுமம் லஞ்சம் கொடுத்துதான் என்பதுதானே குற்றச்சாட்டு.
அதற்கு தி.மு.க. அரசின் கருத்தென்ன? இவ்விவகாரத்தில், பிரதமர் நரேந்திரமோடியின் மவுனத்துக்கான காரணத்தை நாடும், ஏடும் அறியும். மோடியின் அரசியலை எதிர்ப்பதாகக் கோரும் முதல்-அமைச்சர் ஸ்டாலினும் இச்சிக்கலில் அமைதி காப்பதேன்? பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறி, நாளும் வாய்ப்பந்தல் போடும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இப்போது மட்டும் அடக்கி வாசிப்பதேன்?
'ஊழல் பேர்வழி' கவுதம் அதானி மீது பாய வேண்டிய முதல்-அமைச்சர் ஸ்டாலின், உண்மையைச் சொன்ன ராமதாஸ் மீது பாய்வதன் அரசியலென்ன? அதானியுடன் பா.ஜ.க. அரசு நேரிடையான உறவில் இருக்கிறதென்றால், தி.மு.க. அரசு கள்ள உறவில் இருக்கிறதென்பதைத்தானே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
ஆகவே, முதல்-அமைச்சர் ஸ்டாலின், கவுதம் அதானியுடனான தமிழக அரசின் உறவு குறித்து வெளிப்படையாக விளக்க வேண்டும் எனவும், ராமதாஸ் குறித்தான பேச்சைத் திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தில் திடீர் பள்ளம்: இணைப்புச்சாலையும் ½ அடி கீழே இறங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 9:00:04 AM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:22:21 PM (IST)

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:14:08 PM (IST)

முன்பதிவு குறைவு: 6 தீபாவளி சிறப்பு ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:18:39 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை, குமரி உட்பட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:16:03 PM (IST)
