» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி: செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு!

புதன் 27, நவம்பர் 2024 10:15:55 AM (IST)

கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாக இருக்கும் புயலுக்கு 'பெங்கல்' என்று பெயரிடப்பட உள்ளது. இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாவட்டங்களில் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பல்வேறு செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளில் (சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில்) இன்று நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையில் இன்று நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory