» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கான நுழைவு தேர்வு பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
சனி 30, நவம்பர் 2024 5:02:39 PM (IST)
பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கான நுழைவு தேர்வு பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கான நுழைவு தேர்வு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (30.11.2024) துவக்கி வைத்து, பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவ மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தோவாளை வட்டாரம், வளமிகு வட்டாரமாக பல்வேறு கூறுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தோவாளை வட்டாரத்தை சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பல்வேறுபட்ட தொழில் கல்வி படிப்புகளில் இலவசமாக இடம் பெற்று, தங்கள் உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கில் அவ்வட்டாரத்தை சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் NEET, JEE, CLAT தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியானது தொடர்ந்து பல்வேறு பாட வல்லுனர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக இன்று பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் NEET பயிற்சி பெறும் 20 மாணவர்கள், JEE பயிற்சி பெறும் 25 மாணவர்கள் CLAT பயிற்சி பெறும் ஐந்து மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். இப்பயிற்சி சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் வழங்கப்படவுள்ளது.
மாணவர்கள் மிகத் தெளிவான குறிக்கோளுடன் தமது லட்சியத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டும். பாடம் சார்ந்த தேர்ந்த வல்லுனர்களால் வழங்கப்படும் இப்பயிற்சியினை மாணவர்கள் முழு கவனத்துடன் கற்று, அனைத்து மாணவர்களும் தொழிற்கல்வி சார்ந்த உயர்கல்வியில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தலைமை ஆசிரியர்கள் சாந்தி (தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி), முருகன் (ஆரல்வாய்மொழி பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.