» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பஸ் மீது கார் மோதல்: மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி; 6 பேர் படுகாயம்!

புதன் 4, டிசம்பர் 2024 8:45:16 AM (IST)

கேரளாவில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரள மாநிலம் ஆலப்புழை வண்டானம் பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு படிக்கும் 11 மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் ஆலப்புழையில் உள்ள ஒரு தியேட்டரில் திரைப்படம் பார்க்க புறப்பட்டனர். அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டு இருந்தது. அவர்கள் இரவு 9.20 மணியளவில் சங்கினாசேரி முக்கு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஆலப்புழையில் இருந்து காயங்குளம் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது, மாணவர்கள் சென்ற கார் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த 11 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 15 பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்ததும் அந்த பகுதியில் நின்றவர்கள் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் முழுவதுமாக உருக்குலைந்து இருந்ததால் அதில் சிக்கி இருந்தவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.

இதற்கிடையே தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு அவர்கள் படித்து வந்த ஆலப்புழை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலப்புரத்தை சேர்ந்த தேவானந்த் (19), பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீதேவ் வல்சன் (19), கோட்டயத்தை சேர்ந்த ஆயுஷ் ஷாஜி (19), லட்சத்தீவை சேர்ந்த முகமது இப்ராகிம் (19), கண்ணூரை சேர்ந்த முகம்மது அப்துல் ஜப்பார் (19) ஆகிய 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சேர்த்தலையை சேர்ந்த கிருஷ்ணதேவ், கொல்லம் சவராவை சேர்ந்த முகமது, முதுப்பிலங்கலை சேர்ந்த ஆனந்த் மனு, எர்ணாகுளத்தை சேர்ந்த கவுரி சங்கர், எடத்துவாவை சேர்ந்த ஆல்வின் ஜார்ஜ், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷெய்ன் ஆகிய 6 மணவர்களும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்தில் பலியான மாணவர்களின் உடல்கள் நேற்று காலையில் அவர்கள் படித்த அதே கல்லூரியிலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் வர்கீஸ் படுகாயம் அடைந்த சக மாணவர்களையும், பெற்றோரையும் சந்தித்தார். மேலும் சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ், கலாசார துறை மந்திரி சஜி செரியான், விவசாய துறை மந்திரி பி.பிரசாத் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து மரணம் அடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory