» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
2026-ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு அமைவது உறுதி: கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஞாயிறு 22, டிசம்பர் 2024 9:35:27 AM (IST)
2026-ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு அமைவது உறுதி. அப்போது கிறிஸ்தவ மக்களுக்கு குறிப்பாக தலித் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்பட்ட சலுகைகள் நிச்சயம் கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா, சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் பாதிரியார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க. தற்போது களைகள் இல்லா கழனியாக இருக்கிறது. எனவே நிச்சயம் வெற்றிக்கனியை மக்கள் நமக்கு தருவார்கள். வெற்றிக்கனியை பறிக்கப் போகும் மாபெரும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. அனைத்து மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவே அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது. 2026-ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு அமைவது உறுதி. அப்போது கிறிஸ்தவ மக்களுக்கு குறிப்பாக தலித் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்பட்ட சலுகைகள் நிச்சயம் கிடைக்கும்.
மேலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கல்லறை தோட்டங்கள் அமைப்பதற்கான நிலம் வழங்குவதில் உள்ள இடர்பாடுகள் நீக்கப்படும். உதட்டளவில் பேசுபவர்கள் யார்? உள்ளப்பூர்வமாக மக்கள் பக்கம் நிற்பவர்கள் யார்? என்பதை மக்கள் ஆராய்ந்து பார்த்து நல்ல முடிவை தேர்தலில் வழங்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பாதிரியார்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் மக்களுக்கான எந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு செய்து தரவில்லை. அரசின் அலட்சியம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு தான் போகிறார்கள். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி, குறைகளைப் பற்றி ஏதாவது சொன்னால் உடனே எங்கள் மீது பழி போடுகிறார்கள். அவதூறு செய்தி வெளியிடுகிறார்கள்.
மத்திய அரசை நாங்கள் எதிர்க்கவில்லை என்கிறார்கள். எதிர்க்க வேண்டிய நேரத்தில் நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். மீத்தேன் போன்ற மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க. அரசுதான். நாங்கள் பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து நிலத்தை காப்பாற்றினோம்.
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு அகற்றுவதுதான் முதல் வேலை என்றார்கள். ஆனால் இதுவரை செய்தார்களா நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்காதது ஏன்? மக்களுக்காக ஒன்று கூட்டணிக்காக ஒன்று என்று பேசி தி.மு.க. இரட்டை வேடம் போட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அ.தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.சி.சேகர், இணை செயலாளர் டி.சிவராஜ், சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் எம்.ஏ.சேவியர், கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி, முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன், மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, கே.பி.கந்தன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், முகமது இம்தியாஸ், தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் அன்பழகன், உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.