» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அனுமன் ஜெயந்தி விழா: இளநீரை பற்களால் உரித்து தலையில் உடைத்து பக்தர்கள் வழிபாடு
செவ்வாய் 31, டிசம்பர் 2024 8:13:18 AM (IST)
திருச்செந்தூரில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, இளநீரை பற்களால் உரித்து தலையில் உடைத்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் சரவணப்பொய்கை சாலையில் உள்ள ராமதூத யோக ஆஞ்சநேயர் கோவிலில் காலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கோவில் முன்பு குவித்து வைக்கப்பட்டு இருந்த 1500-க்கும் மேற்பட்ட இளநீரை ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை போன்று பக்தி பரவசத்துடன் தங்களது பற்களால் உரித்தனர். பின்னர் அவற்றை தங்களது தலையிலே உடைத்து இளநீரை பருகினர். கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்களுக்கும் இளநீரை பிரசாதமாக கொடுத்தனர். சில பெண்களும் ஆஞ்சநேயரை போன்று இளநீரை பற்களால் உரித்து, தங்களது தலையில் உடைத்து வழிபட்டனர்.
பக்தர்கள் தலையில் உடைத்து வழங்கிய இளநீரை, கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டி வந்த பெண்கள் மடியேந்தி பெற்று பருகினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று திருச்செந்தூர் சண்முகபுரம் ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் உள்ள அனுமன் சுவாமிக்கு வெற்றிலை - வடை மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.