» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் 5,77,849பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் : ஆட்சியர் தகவல்!!
வியாழன் 9, ஜனவரி 2025 11:45:12 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5,77,849 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பட்ட மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இன்று சென்னையில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் அனந்தக்கரை பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக்கடை II-ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் இன்று (09.01.2025) சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பேசுகையில்:-
தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் நகர பகுதிகள் முதல் கடைகோடி கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். அதன்ஒருபகுதியாக உலகத்தமிழர்கள் அனைவாராலும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், இதர கூட்டுறவின் கீழ் செயல்படும் 46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழுவால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,77,849 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு இன்றிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு வழங்கப்படுகிறது. கூடுதலாக குடும்ப அட்டைத்தார்களுக்கு இலசவ வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்தரப்பட்ட மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கன்னியாகுமரி பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் இணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) சிவகாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா, மண்டல தலைவர் செல்வகுமார், மாநகராட்சி குழு உறுப்பினர் மோனிகா விமல், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், தனி வட்டாட்சியர் கண்ணன், கபிலன், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.