» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய தனிப்படை தீவிரம்!

வெள்ளி 10, ஜனவரி 2025 8:32:51 AM (IST)

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக உள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பணம் பறித்த வழக்கில் இவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த தொழில் அதிபர் ஜூனைத் என்பவர் தன்னிடம் வேலை பார்க்கும் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணம் கொடுத்து மருத்துவ உபகரண கருவிகளை வாங்கி வருமாறு கடந்த மாதம் சென்னைக்கு அனுப்பி வைத்தார். அப்போது அவரிடம், ஹவாலா பணமா? என்று மிரட்டி ரூ.20 லட்சம் பணமும் பறிக்கப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே இந்த பரபரப்பு வழிப்பறி சம்பவம் நடந்தது.

‘வேலியே பயிரை மேய்ந்தது' போன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜா சிங் (வயது 48), வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் (42), ஊழியர்கள் பிரதீப் (41), பிரபு (41) ஆகிய 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங்கையும், வருமான வரி அதிகாரி தாமோதரனையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சன்னி லாயிட்டுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

அதன் பேரில், சன்னி லாயிட்டை விசாரணைக்கு ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் அழைத்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். இதனால், அவரை தேடி பிடித்து கைது செய்ய 2 தனிப்படை போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாயிடு, ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். பூக்கடை போலீஸ் நிலையத்தில் அவர் பணியாற்றியபோது, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நடத்திய வாகன சோதனையில் லட்சக்கணக்கான பணத்தை அவர் பறிமுதல் செய்ததாகவும், அந்த பணத்தை தற்போது கைதாகி உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங்கோடு சேர்ந்து ஏப்பம் போட்டு ஊழல் புரிந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில்தான், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் அவர் பணியில் சேர்ந்தபோது, வெளிமாவட்டத்தில்தான் அவருக்கு பணியிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், உயர் அதிகாரிகளின் தயவால், அவர் சென்னை நகருக்கு மாறுதலாகி வந்து, சைதாப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் தனக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளை மதிப்பதில்லை என்றும், தன்னிச்சையாக செயல்பட கூடியவர் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

தற்போது பிரச்சினையில் சிக்கி உள்ள சன்னி லாயிடுவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை ஆகும். இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். போலீஸ்காரராக பணியில் சேர்ந்த இவர், தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தோடு வசிக்கிறார். இவர் மீது, இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உயர் அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பிறகுதான், இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி முழுமையாக தெரிய வரும் என்றும், ஏற்கனவே கைதாகி உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், வருமான வரி அதிகாரி தாமோதரன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில்தான், அவரை தேடி வருவதாகவும் போலீசார் கூறினார்கள். இவர் சென்னையில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory