» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

வெள்ளி 10, ஜனவரி 2025 10:51:02 AM (IST)

"தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். நெல்லுக்கான ஈரப்பதத்தை 18 விழுக்காட்டில் இருந்து 21% ஆக அதிகரிக்க வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் சம்பா - தாளடி பருவ அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்கும் நெல்லை கொள்முதல் செய்ய போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சம்பா - தாளடி பருவ நெல் கொள்முதலுக்காக திசம்பர் மாத இறுதியிலும், ஜனவரி மாதத் தொடக்கத்திலும் அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், ஜனவரி மாதம் பிறந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை போதிய எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. ஓரிரு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டாலும் கூட அங்கு பல்வேறு பற்றாக்குறைகளைக் காரணம் காட்டி நெல் கொள்முதல் நடைபெறவில்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு 7.27 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் 2.51 லட்சம் ஏக்கர் கூடுதலாக 9.78 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இது தவிர தாளடி பருவ நெல் சாகுபடி பல லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டிருப்பதால், நடப்பாண்டில் அதிக அளவில் நெல் கொள்முதலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், அதிக எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். ஆனால், இயல்பான எண்ணிக்கையில் கூட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.

அண்மையில் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் செய்த தொடர் மழையால் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதனால் உழவர்களுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டது. மழையில் தப்பிய நெல்லை அறுவடை செய்தும் கூட, நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் தனியார் இடைத்தரகர்களிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். அதனால், உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டும், அவர்கள் சாகுபடி செய்த நெல்லுக்கு ஓரளவாவது நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். 

கடந்த காலங்களில் பெய்த மழையையும், பிப்ரவரி மாதம் வரையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதைக் கணக்கில் கொண்டு நெல்லுக்கான ஈரப்பதத்தை 18 விழுக்காட்டில் இருந்து 21% ஆக அதிகரிக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை காத்திருக்க வைக்காமல், அவர்களிடம் மூட்டைக்கு ரூ. 50 வீதம் கையூட்டு கேட்டு கொடுமைப்படுத்தால் நெல் மூட்டைகள விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory