» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வள்ளலார் சனாதன தர்மத்தை போதித்தார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
செவ்வாய் 14, ஜனவரி 2025 9:52:27 AM (IST)
‘வள்ளலார் சனாதன தர்மத்தை போதித்தார்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஓசூர் வந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் சிறப்பாக தொண்டு புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். அப்போது அவர், ‘சகோதர சகோதரிகளுக்கு எனது வணக்கம். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் தனது பேச்சை தொடங்கினார்.
தொடர்ந்து ஆங்கிலத்தில் அவர் பேசியதாவது: நான் வள்ளலாரின் பக்தன். நான் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே அவரது பொன்மொழிகள், போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன். நமது நாடும், சமுதாயமும் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது, வள்ளலார் தோன்றினார்.
ஒவ்வொரு உயிரும் சமம் என்று போதித்த வள்ளலார், அதர்மம் தலை தூக்கும் போது அவதரித்து அனைவரையும் காப்பாற்றியவர். அவர் போதித்தது அமைதி, சன்மார்க்கம், அனைவரும் சமம் என்பதே, அதை தமிழகம் வரும் முன்னே அவரின் போதனைகள், வழிபாடுகள் குறித்து நான் அறிந்து கொண்டேன். அதை பின்பற்றி ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
தீண்டாமையை ஒழிக்கவும், உயர் சாதி, கீழ் சாதி என்ற வேறுபாட்டை நீக்கவும், தங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்கு செய்ய வேண்டும் என்று வள்ளலார் பாடுபட்டார். பல நூற்றாண்டுகள் கடந்து வந்த பிறகும், சமூக நீதி ஏற்றத் தாழ்வுகளுடன்தான் உள்ளது. குறிப்பாக, 60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள். சமூகத்தில் இன்றளவும் சாதிய ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை முழுமையாக ஒழிக்க, அனைவரும் வள்ளலார் வழியினை பின்பற்றினால் இது முழுமையாக அகற்றப்படும் என்று நம்புகிறேன். வள்ளலார் சனாதன தர்மத்தை போதித்தார். மனிதர், விலங்குகள், மற்றும் ஒவ்வொரு உயிரும் சமம் என்பதுதான் சனாதன தர்மம்.
ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது. சமஸ்கிருதத்தை அழிக்க பார்த்தனர். அதனை வள்ளலார் மீட்டார். வள்ளலாரின் வழியினை பின்பற்றுவதுடன் வள்ளலாரின் பக்தராக உள்ள பிரதமர் நரேந்திரமோடி நமக்கு கிடைத்துள்ளார். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசினார். விழா நிகழ்ச்சிகள் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி பாடல்களுடன் தொடங்கியது. விழா முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டது.