» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வியாழன் 16, ஜனவரி 2025 5:17:03 PM (IST)

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்குவது வாடிக்கை. 

இதன் முக்கிய நோக்கம், பொங்கல் பண்டிகையை, தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக ஏழையெளிய மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதுதான். இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், அனைத்தையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும். ஆனால், இந்த அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்து இருந்தது. நிதிநிலையை காரணம் காட்டி, ரொக்கம் வழங்கப்படாது எனவும் தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டது. இது தி.மு.க. அரசின் நிதிச் சீரழிவிற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பொங்கலுக்கு முன்பு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு மட்டுமே குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. பொங்கலுக்கு முன்பே வேட்டி, சேலை வழங்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கேற்ப பணிகளை தி.மு.க. அரசு தொடங்கி இருக்குமேயானால், பொங்கலுக்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இதனை வழங்கியிருக்கலாம். 

ஆனால், சரியான திட்டமிடல் இல்லை. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அக்கறையின்மைக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. சென்ற ஆண்டும் இதே நிலைமைதான். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், சென்ற ஆண்டு வேட்டி, சேலை வழங்காமலேயே, வழங்கிவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இந்த ஆண்டு அதுபோன்று குறுஞ்செய்தி அனுப்பப்படவில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்.

தி.மு.க. அரசின் திறமையின்மை காரணமாக, நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கும், அங்குள்ள பணியாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பணியாளர்களை சந்தேகப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் தவறுக்கு நியாய விலைக் கடைப் பணியாளர்கள் பலியாக்கப்படுகின்றனர்.

முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை உடனடியாக கிடைக்க வழிவகை செய்யவும், இனி வருங்காலங்களில் பொங்கல் திருநாளுக்கு முன்பே இவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory