» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 4:50:08 PM (IST)
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு தாலுகா மருத்துவமனை, பூதப்பாண்டி குழந்தைகள் மையம், பூதப்பாண்டி கனரா வங்கி உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்ட பூதப்பாண்டி அரசு தாலுகா மருத்துவமனையை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மகப்பேறு பகுதியை ஆய்வு செய்து மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி முறைகளை உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொண்டதோடு, பிரசவ பின் கவனிப்பு வார்டை ஆய்வு செய்து அங்கு பிரசவித்த தாய்மார்களிடம் மருத்துவர்கள் கனிவுடன் கவனிக்கிறார்களா?, உணவு சுகாதாரமாக வழங்கப்படுகிறதா?, அரசின் தாய்சேய் நல பெட்டகம் மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா என கேட்டறியப்பட்டது.
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மருத்துவமனையானது வளமிகு வட்டார திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு பிரசவ முன்கவனிப்பு பரிசோதனை காத்திருப்பு அறையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக குளிர்சாதன வசதி, 24 மணி நேரமும் வெந்நீர் வசதி, பிரசவ பகுதியில் ஒவ்வொரு படுக்கைகளுக்கு இடையேயும் திரைச்சீலை மறைப்பு வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளதால் அதன் மூலம் அரசு மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என மருத்துவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பிரசவ பகுதியில் தாய்மார்களிடம் கலந்துரையாடி நீங்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்ட வேண்டும் எனவும், பிரசவ காலத்திற்கு முன்போ அல்லது பின்போ எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு மட்டும் அன்றி பிரசவ காலத்தில் மருத்துவமனையை அணுகுவதற்கும் பிரசவ பின் கவனிப்புக்காகவும், பச்சிளங் குழந்தைகளை மருத்துவமனைகளில் தொடர் கவனிப்புக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுத்த வேண்டும் எனவும், மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு விரிக்கப்பட்ட படுக்கை விரிப்புகளை தினமும் மாற்றும் வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் படுக்கை விரிப்புகளை பயன்படுத்த வேண்டும் எனவும், வார்டுகளின் தரை மற்றும் சுவர்பகுதியில் கறைகள் இல்லாதவாறு தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஆய்வகத்தில் செய்யப்படும் பரிசோதனை விவரங்களை கேட்டறிந்து நீரிழிவு நோய், ஆஸ்துமா, சிறுநீரக குறைபாடு, எடை குறைவு உடையோர், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு சளி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் எனவும், இதன்மூலம் காசநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூதப்பாண்டி குழந்தைகள் மையத்தை ஆய்வு மேற்கொண்ட போது குழந்தைகள் மையத்தில் 6 குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டியான இணை உணவு கொழுக்கட்டை வழங்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்களால் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட கைபேசியில் போஷன் ட்ராக்கர் செயலியில் உள்ளீடு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயலியில் முழுமையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்படாதது குறித்து துறை அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டு 2 நாட்களுக்குள் அனைத்து குழந்தைகளின் தடுப்பூசி விபரங்கள் போஷன் ட்ராக்கர் செயலியில் பதிவு செய்ய துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து பூதப்பாண்டி கனரா வங்கியினை நேரில் ஆய்வு மேற்கொண்டு கலைஞர் கைவினைத்திட்டம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் பிராபகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலர் தா.ராஜ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் தோவாளை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், செவிலியர்கள், மருத்துவர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.