» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கூலிக்கு ஆள் வைத்து கொன்ற பெண் பரபரப்பு தகவல்!
ஞாயிறு 19, ஜனவரி 2025 10:51:39 AM (IST)
நாகர்கோவில் அருகே ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கூலிக்கு ஆள் வைத்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் பெருவிளை அருகே உள்ள கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஸ்டீபன் (58). நாட்டு வைத்தியரான இவர், ஜோதிடமும் பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார். இதனால் வீட்டில் கணவன்-மனைவி மட்டும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி ஜாண் ஸ்டீபன் வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இதுபற்றிய தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜாண் ஸ்டீபன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிவில் ஜாண் ஸ்டீபன் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்ததும், முகத்தில் தாக்கப்பட்டு ரத்த காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதை வைத்து பார்த்தபோது அவரை யாரோ மர்ம ஆசாமி அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது. கொலையாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
முதல்கட்டமாக ஜாண் ஸ்டீபனின் செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அவா், நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தை சேர்ந்த நம்பிராஜன் (25) என்பவரிடம் அடிக்கடி செல்போனில் பேசியதும், கொலையான அன்றும் கூட நம்பிராஜனிடம் பேசி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நம்பிராஜன் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கன்னியாகுமாியில் கடை நடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நம்பிராஜனை போலீசார் பிடித்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த கலையரசி (43) என்பவரின் தூண்டுதலின் பேரில் ஜாண் ஸ்டீபனை கழுத்தை நெரித்து நம்பிராஜன் கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடம் பார்ப்பதற்காக ஜாண் ஸ்டீபனை, கலையரசி அணுகியுள்ளார். அப்போது அவர் தனக்கும், கணவருக்கும் இடையே பிரச்சினை இருப்பதாகவும், 2 பேரும் சேர்ந்து வாழ ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறும்படியும் கேட்டுள்ளார். இதற்கு சில பரிகாரங்களை செய்யும்படி ஜாண் ஸ்டீபன் கூறினார். அதன்படி அவரும் செய்தார். ஆனால் அதன்பிறகும் கணவன்-மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
பலமுறை ஜோதிடம் பார்த்த பிறகும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. இது கலையரசிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜாண் ஸ்டீபனிடம் இதுபற்றி கேட்டுள்ளார். ஜோதிடர் கூறியது எதுவும் பலிக்காததால் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் ஜாண் ஸ்டீபன் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ஜாண் ஸ்டீபனை கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்காக நம்பிராஜனை தொடர்பு கொண்டு ஜாண் ஸ்டீபனை கொலை செய்யும்படி கூறியுள்ளார். அதற்கு லட்சக்கணக்கில் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். பணத்தின் மீதான ஆசையில் நம்பிராஜன் சம்பவத்தன்று ஜாண் ஸ்டீபனை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.
இதைத் தொடர்ந்து நம்பிராஜன் கூறிய தகவல்களின் அடிப்படையில் கலையரசியையும் போலீசார் பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.