» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு
வியாழன் 30, ஜனவரி 2025 11:34:57 AM (IST)
வெளியூர்களிலிருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர்கள் கருதுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரை ஒட்டியுள்ள பொடவூர் பகுதியில் அகில இந்திய மகளிர் சங்கத்தின் 93ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த ஆளுநர் ரவி, பெண்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "சென்னை பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும். பட்டமளிப்பு விழாக்களில் என்னை சந்தித்து பேசும் மாணவிகள், சென்னை பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று தங்கள் பெற்றோர்கள் கூறுவதாகவும், எனவே சென்னைக்கு அனுப்ப தயங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். எனவே சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த 21ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதாக கூறியிருந்தார். அதாவது, "தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், வடகிழக்கு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெற்றோர்கள் தங்கள் மகள்களை கல்வி பயில தமிழகத்திற்கு அனுப்புகின்றனர். வெளிமாநில மாணவிகளுக்கு, தமிழ்நாட்டின் விருந்தோம்பல் சிறப்பானதாக இருக்கிறது" என்று கூறியிருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இருக்கிறது என்று பேசியிருந்த ஆளுநர், தற்போது சட்டென மாற்றி பேசி விமர்சித்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.