» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் மாயம் : கனிமொழி எம்.பியிடம் மனைவி கோரிக்கை!
வியாழன் 30, ஜனவரி 2025 3:12:26 PM (IST)
குஜராத் கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(29). கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த வருடம் (22/11/2024) அன்று கொச்சியிலிருந்து குஜராத் போர்பந்தர் கடல் பகுதியில் தங்கி மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். கடலில் மீன் பிடிப்பதற்கு வலை வீசும்போது அண்ணாதுரை கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அண்ணாதுரை உடன் மீன் பிடிக்க சென்றவர்கள் கடலில் குதித்து அண்ணாதுரையை தேடி உள்ளனர். மேலும், படகில் இருந்து செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் கடலோர காவல் படைமீட்பு குழுவினருக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இன்று (30/01/2025) தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில், கடலில் காணாமல் போன மீனவர் அண்ணாதுரையின் மனைவி சந்தன செல்வி, கணவர் கடலில் விழுந்து காணாமல் போனது குறித்து மேல் நடவடிக்கை எடுத்து எனது கணவரை கண்டுபிடிக்கவும், முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் மாதாந்திர உதவித் தொகை மற்றும் வேலை வழங்கவும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
காணாமல் போன மீனவரின் மனைவி சந்தன செல்விக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளார். தற்போது அவரும் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். மீனவர் கடலில் விழுந்து காணாமல் போய் இன்றுடன் 70 நாட்கள் ஆகின்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர் மு.மருதப்பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.