» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக நீதியை கடைப்பிடிக்கும் மாநிலாமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது : ஆட்சியர் பெருமிதம்!

வியாழன் 30, ஜனவரி 2025 3:59:45 PM (IST)



ஏற்றத்தாழ்வில்லாத சமூக நீதியை கடைப்பிடிக்கும் மாநிலாமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என மனித நேய நிறைவு விழாவில் குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நாகர்கோவில் டதி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் இன்று (30.01.2025) மனித நேய நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு மாணவ மாணவவியர்களிடையே பேசுகையில்-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 முதல் 30 வரை மனித நேய வார விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்விழாவினை முன்னிட்டு ஜனவரி 24 முதல் ஜனவரி 29 வரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் மனித நேயம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவின் இறுதி நாளான இன்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கிட நாம் இங்கு குழுமியிருக்கிறோம்.

யாரென்றே அறியாத ஒருவர் அழும்போது காரணமே இல்லாமல் நம் கண்களில் நீர் கசியுமாயின் அதுதான் மனிதநேயம் ஆகும். மனித நேயம் என்பது மனிதர்களிடம் அன்பு காட்டுதல், உயிர்களைக் காப்பாற்றுதல், துன்பத்தை தணித்தல் போன்ற நெறிமுறைகளைக் கொண்டது. இது மனித வாழ்வின் அடிப்படை பண்பாகும். நாளுக்கு நாள் மனிதர்களின் வாழ்க்கைமுறை மாறி வருவதால் மனிதநேயத்தின் அளவு நம்மிடம் குறைந்து வருகிறது. இக்காலத்தில் முதியோர் இல்லங்களும் ஆதரவற்றோர் இல்லங்களும் பெருகி வருகின்றன. இவை இன்றைய தலைமுறையினர் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையை குறைத்துவிட்டது என்றே கூறலாம்.

ஆனால் சமீப கால கரோனா நோய்த்தொற்று மற்றும் கனமழைக்கு பின் நடைபெற்ற நிவாரணப்பணிகளில் இளைய தலைமுறையின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிவாரணப்பணிகள் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. மாணவ மாணவிகளான நீங்கள் மாணவப் பருவத்திலேயே மனிதநேயத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனித நேயத்துடன் ஒழுக்கத்தை கடைபிடிப்பதோடு கல்வியிலும் சாதனை படைத்திட வேண்டும். மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு உயர்கல்வி பயில பல்வேறு திட்டங்கள் வகுத்துள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஏற்றத்தாழ்வில்லாத சமூக நீதியை கடைப்பிடிக்கும் மாநிலாமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் பயிலுகின்ற சக மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருடனும் எந்தவொரு சாதி, சமய, பாகுபாடு இன்றி ஒற்றுமையாக பழகுவதோடு, நாம் அனைவரும் தீண்டாமை என்ற தீய சக்தியை கடைபிடிக்காமல் மனிதநேயத்தோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென பேசினார்.

அதனைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (நாகர்கோவில்) துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாலாஜி, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜாய்ஸ் புனிதா, தனி வட்டாட்சியர் திருவாழி, சமூக ஆர்வலர் முனைவர் சுரேஷ் சுவாமியார் காணி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory