» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி சம்பவத்தை மறந்துவிடக்கூடாது : இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

வியாழன் 20, மார்ச் 2025 3:32:28 PM (IST)

"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவம் போன்றவற்றையெல்லாம் நீங்கள் மறந்துவிடக் கூடாது" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் தமிழகத்தில் நிகழும் கொலை சம்பவங்கள் குறித்து பேச அனுமதி கோரினார். நேற்று சேலத்தில் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர் பேசினார். "அன்றாட நிகழ்வுகள் போல் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகிறது.” எனக் கூறினார். ஆனால், அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "எனது தலைமையில் காவல்துறை குற்றச் சம்பவங்களைக் கையாள்வதிலும், தடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் பழிக்குப்பழி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. 

ஆனாலும், திமுக ஆட்சியில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது போல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. எந்தக் கட்சியினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றப் பின்னணி உடையோரை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை சிறப்பாக மேற்கொள்கிறது.” என்றார்.

அதிமுக வெளிநடப்பு: 

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், "தமிழகத்தில் அன்றாடம் கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுதான் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் சாதனைப் பட்டியல். நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை சம்பவத்தில் புகார் கொடுத்தவரிடம் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளது. அதன் விளைவாக அந்த நபர் உயிரிழந்தார். ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு நிகராக செயல்பட்ட தமிழக காவல்துறை இன்று கட்டுப்பாட்டில் இருக்கிறது.” என்றார்.

முன்னதாக, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய முற்பட்டபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின்  "தூத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் போன்றவற்றையெல்லாம் நீங்கள் மறந்துவிடக் கூடாது. உங்களைப் பொறுத்தவரையில், டி.வி-யைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. தைரியம் இருந்தால், நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு அவர்கள் போக வேண்டும். உங்களுக்கு தைரியம் இருந்தால் பதிலைக் கேட்டுவிட்டுப் போக வேண்டும். அந்தத் தைரியம் இல்லாமல் ஓடுகிறீர்களே.” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory