» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாராயம் விற்பதே குற்றம், அதிலும் ஊழல் மிகப்பெரிய குற்றம் : சீமான் பேட்டி

வெள்ளி 21, மார்ச் 2025 12:09:08 PM (IST)

டாஸ்மாக் விவகாரத்தில் விசாரணைக்கு தமிழக அரசு தடை கேட்கிறது என்றால் வேதனையான விஷயம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். 

மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் "தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் அச்சத்துடனே வெளிவரக்கூடிய ஒரு சூழல் உருவாகி உள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கொலையில் சம்பந்தப்பட்டவர் யார்? கொடநாட்டில் கொலை நடந்தது, அதை செய்தது யார்? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அதை சொல்ல முடியவில்லை. 

கொலை சம்பவங்கள் செல்போன் இருப்பதால் தற்போது வெளியில் வருகிறது. இல்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் வெளியே வர வாய்ப்பு இல்லை. தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறது என்பது ஒரு வேதனை அளிக்க கூடிய செயல். கொலைக்கு முன்பு பேசியதை காவல்துறை ஒட்டு கேட்கலாமே, அப்படி செய்திருந்தால் சம்பவம் நடப்பதற்கு முன்பே தடுத்திருக்கலாம், ஏன் அதை செய்யவில்லை?

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று புகார் அளித்த பெண்ணின் வாக்குமூலத்தை வெளியிட்ட காவல்துறை, ஞானசேகரன் வாக்குமூலத்தை ஏன் வெளியிடவில்லை? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். டாஸ்மாக்கில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் குறித்த நடவடிக்கை எடுப்பவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது. நாங்கள் தான் போராட வேண்டும். மும்மொழிக் கொள்கை, தொகுதி வரையறை குறித்து பேசுகிறார்கள். 

அருந்ததியர், இஸ்லாமியர், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறீர்கள். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடிய வில்லை. ஆனால் இங்கே இருப்பவர்கள் மத்திய அரசை குற்றம் சாட்டி வரு கின்றனர். விஜய்க்கு எங்களை போன்று வெளி யில் வர நேரமில்லை. நேரம் வரும்போது வெளியே வருவார்.முதலில் என்னை தி.மு.க.வின் பி டீம் என்றார்கள். அண்ணாமலை கருத்துக்கு நான்பதில் சொல்ல வேண்டியதில்லை.

பெரியார் குறித்து, திராவிடம் குறித்த இங்கு பேசினால் எடுபடாது. நான் மட்டுமல்ல, யார் பேசினாலும் எடுபடாது. ஆளுகிற அரசின் லஞ்சம், ஊழலுக்கு ஆதரவாக பேசினால் ஆதரவு கிடைக்கும். எதிர் கருத்து ஏற்றுக்கொள்ளப்படாது. இங்கே ஜனநாயகம் இல்லை, கொடுங்கோன்மை தான் நடக்கிறது. சாராய ஆலை அதிபர்கள் முதல்வராக இருந்தால் சாராய விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடக்கத்தான் செய்யும். 

சாராயம் விற்பதே குற்றம், ஆனால் அதிலும் ஊழல் என்பது அதைவிட குற்றம். அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தமிழக அரசு மனு அளித்தது வேதனை அளிக்கிறது. முதலில் ஒரு லட்சம் கோடி என்றார்கள், பிறகு ஆயிரம் கோடி என்றார்கள், இன்னும் கொஞ்ச நாள் கழித்து ரூ.100 கோடி, அதன் பிறகு எதுவுமே இல்லை என்பார்கள்.

ஆயிரம்கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தடை கேட்கிறது என்றால் வேதனையான விஷயம். 2016-ல் டாஸ்மாக்கை மூடுவோம் என்றவர்கள், 2021-ல் அதைப் பற்றி ஏன் பேச வில்லை. தமிழகத்தில் டாஸ்மாக்கால் அதிக விதவைகள் உருவாகுகிறார்கள் என பேசினார்கள் தற்போது அதைவிட அதிக மாக இளம்விதவைகள் உருவாகியுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory