» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நகைக்கடை அதிபரை கடத்தி கொல்ல சதித்திட்டம் : தூத்துக்குடி ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

சனி 22, மார்ச் 2025 8:51:59 AM (IST)

சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரை கடத்திச்சென்று கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி ரவுடியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிப்பிடித்தனர்.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவர் ஆதம்பாக்கத்தில் அடகு மற்றும் நகை கடை நடத்தி வருகிறார். இவரை கடத்திச்சென்று கொலை செய்யும் சதித்திட்டத்தோடு சென்னையில் 5 பேர் சுற்றி திரிவதாக சென்னை உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த கூலிப்படை கும்பலை சேர்ந்த கொடுங்கையூர் சுரேஷ் என்பவர் மாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் வேளச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த வினோத், பாலமுருகன், சச்சின், முருகன் ஆகிய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் வினோத், சச்சின், முருகன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர் ஆவார்கள். இந்த கூலிப்படை கும்பலின் தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஐகோர்ட்டு மகாராஜா (31) என்பவர் போலீஸ் கையில் சிக்காமல் தப்பியோடி விட்டார்.

அவரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, அடையார் துணை கமிஷனர் பொன் கார்த்திக், கிண்டி உதவி கமிஷனர் விஜயராமுலு ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை ஒன்று ரவுடி ஐகோர்ட்டு மகாராஜாவை கைது செய்ய களத்தில் இறக்கப்பட்டனர்.

இந்த தனிப்படையில் இடம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஐகோர்ட்டு மகாராஜாவை கைது செய்ய அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்று விசாரித்தபோது ரவுடி ஐகோர்ட்டு மகாராஜா நெல்லை டவுன் மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருக்கும் தகவல் தெரிய வந்தது. உடனே தனிப்படை போலீசார் நெல்லை டவுன் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருந்த அவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஐகோர்ட்டு மகாராஜா சென்னை அழைத்துவரப்பட்டார். வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நகைக்கடை அதிபரை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும், கார் ஒன்றையும் பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டனர்.

மோட்டார் சைக்கிளை கிண்டி ரேஸ்கோர்ஸ் பின்புறம் உள்ள தெரு ஒன்றில் நிறுத்தி வைத்திருப்பதாக ஐகோர்ட்டு மகாராஜா தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அவரை அந்த பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அவர் அடையாளம் காட்டினார்.

திடீரென்று அவர் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து தனிப்படை போலீசாரை மிரட்ட ஆரம்பித்தார். இதை சற்றும் எதிர்பாராத தனிப்படை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தனது கைத்துப்பாக்கியை எடுத்து ஐகோர்ட்டு மகாராஜாவை நோக்கி குறி பார்த்தார்.

கற்களை எடுத்தும் போலீசார் மீது வீசினார். அந்த கற்கள் பட்டு போலீசார் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. இந்த பதற்றமான சூழலில் தற்காப்புக்காக வேறுவழியின்றி ஐகோர்ட்டு மகாராஜாவின் வலது காலில் தனது கைத்துப்பாக்கியால் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சுட்டார்.

வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் ஐகோர்ட்டு மகாராஜா போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தார். அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. சொகுசு கார் ஒன்றையும் போலீசார் மீட்டனர்.

காலில் குண்டு காயத்துடன் ரவுடி ஐகோர்ட்டு மகாராஜா முதலில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் மூலம் ஐகோர்ட்டு மகாராஜா காலில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது. அங்கு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்று சென்னையில் ரவுடி பாம் சரவணன் உள்ளிட்ட 3 ரவுடிகள் மீது போலீசார் காலில் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். ரவுடிகளின் பாஷையிலேயே எங்களது பதிலடி இருக்கும் என்று போலீஸ் கமிஷனர் அருண் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனடிப்படையில் ரவுடிகள் மீது போலீசாரின் கடும் நடவடிக்கை தொடர்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory