» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி - சரளப்பள்ளி சிறப்பு ரயிலின் வழித்தடத்தை மாற்றி இயக்க கோரிக்கை!

திங்கள் 24, மார்ச் 2025 11:07:59 AM (IST)

கன்னியாகுமரி - சரளப்பள்ளி (ஐதராபாத்) சிறப்பு ரயிலின் காலஅட்டவணை மற்றும் வழித்தடத்தை மாற்றி இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

நாகர்கோவிலிருந்து ஐதராபாத் அதாவது காச்சிகுடாவுக்கு அதிகமாக இரட்டைபாதை இருபாப்புதை உள்ள வழித்தடம் வழியாக திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக வாராந்திர சிறப்பு ரயிலை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட தென் மத்திய ரயில்வே மண்டலம் கடந்த ஒரு வருடமாக இயக்கி வந்தது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதாவது சனிக்கிழமை இரவு 12:30 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திங்கள் காலை 6:00 மணிக்கு காச்சிகுடா சென்று வந்தது. 

இவ்வாறு இயக்கப்பட்டதால் இந்த ரயில் வார விடுமுறை முடிந்து திங்கள் காலை அலுவலகங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பயணிகள் தங்கள் பகுதிகளில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் கடைசி பேருந்தில் ஏறி நாகர்கோவில் ரயில் நிலையம் வந்து சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ரயில் நிலைத்தில் காத்திருந்து இந்த ரயிலில் பயணம் செய்து வந்தனர். இந்த ரயிலின் சேவை மார்ச் மாதம் 30-ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகின்றது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட ரயிலுக்கு பதிலாக ஐதராபாத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ரயில்வே முனையம் சரளப்பள்ளியிலிருந்து திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், மைலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி  வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சரளப்பள்ளியிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 21:50 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வெள்ளி அதிகாலை 1:20 மணிக்கு, கன்னியாகுமரிக்கு 2:30 மணிக்கு வந்து சேர்கிறது. 

மறுமார்க்கமாக இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை  புறப்பட்டு சனிக்கிழமை 11:40 மணிக்கு போய் சேருகின்றது. இந்த ரயில் 1580 கி மீ தூரத்தை 30 மணி நேரத்தில் பயணம் செய்கிறது. இரண்டு ரயில்களுக்கான தூரம் வித்தியாசம் 62 கி.மீ ஆகும். ஆனால் இந்த 62 கி.மீ தூரமும் விழுப்புரம் முதல் தஞ்சாவூர் வரை உள்ள ஒருவழிப்பாதையாக உள்ள பகுதி ஆகும். இந்த பகுதியில் கிராசிங் வேண்டி அதிக நேரம் பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தி நிறுத்தி இயக்கப்படுவதால் இந்த ரயில் இவ்வளவு காலதாமதமாக நாகர்கோவில் வந்து சேர்கிறது.

ஆனால் இந்த ரயில் சரளப்பள்ளியிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் போது காலஅட்டவணை மிகவும் மோசமாக உள்ள காரணத்தால் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. குமரி, நெல்லை, போன்ற மதுரைக்கு தெற்கே உள்ள தென் மாவட்டங்கள், திருச்சி, தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பயன்பட வேண்டும் என்று ஒரு ரயில் ரயில்வேதுறை இயக்கியுள்ளது. இவ்வாறு இயக்கியபோது இந்த ரயில் ஒருவருக்கும் பயன் இல்லாமல் உள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்த ரயில் ஐதராபாத்தில் உள்ள சரளப்பள்ளியிலிருந்து இயக்கப்படுவதால் ஐதராபாத்தில் உள்ள பயணிகள் ரயில் கட்டணத்தை விட சரளப்பள்ளி ரயில் நிலையம் செல்வதற்கு அதிக கட்டணம் ஆட்டோ கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இந்த ரயிலில் பயணிகள் பயணம் செய்ய யோசிக்க வைக்கிறது. இது இந்த ரயிலின் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் ரயில்வேக்கு வரும் வருவாய் மிகவும் குறைய வாய்ப்பு உள்ளது. இது மட்டுமில்லாமல் நீண்ட கால நோக்கில் கன்னியாகுமரிக்கு ரயில் இயக்கினால் வருவாய் கிடைக்காது என்று முத்திரையும் குத்த வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்பு பாதை சுமார் 4000 கோடிகள் செலவில் தற்போது தான்  இருவழி பாதை பணி முடிவு பெற்றுள்ளது. இவ்வளவு மக்கள் வரிப்பணத்தில் அதிக பொருட்செலவில் இருவழிபாதை அமைக்கப்பட்டும் இந்த வழி பாதையில் ரயில் இயக்காமல் மீண்டும் ஒரு வழிபாதை வழியாக ரயிலை இயக்கி உள்ளது தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு ஆதரவாக ரயில்களை இயக்குகிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

எனவே இந்த ரயில் முன்பு இயங்கியது போன்று காச்சுகடாவிலிருந்து நாகர்கோவிலுக்கு அதே காலஅட்டவணையில் அதே வழித்தடம் வழியாக வார விடுமுறையை முன்னிட்டு பயணம் செய்ய வசதியாக அதே நாள் இன்னமும் சிறிய அளவில் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory