» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் போலீஸ்காரரை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் கைது: பரபரப்பு தகவல்!

திங்கள் 24, மார்ச் 2025 8:22:48 PM (IST)

மதுரையில் போலீஸ்காரரை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். முன்னதாக அவர் அரிவாளால் வெட்டியதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்த அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன் (36). இவருக்கு திருமணமாகி பாண்டிச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். மலையரசன் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே அவரது மனைவி கடந்த 1-ந்தேதி நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனது உறவினர்கள் அரவணைப்பில் குழந்தைகளை விட்டு விட்டு, மனைவி அனுமதிக்கப்பட்டு இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வாங்குவதற்காக கடந்த 18-ந்தேதி சென்றிருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்ற விபரம் எதுவும் தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில் மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலை ஈச்சனோடையை அடுத்த புதுக்குளம் கண்மாய் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் பிணமாக கிடந்தவர் மாயமான போலீஸ்காரர் மலையரசன் என்பது தெரியவந்தது. அதனை அவரது உறவினர்களும் உறுதிப்படுத்தினர்.

மனைவியின் சிசிச்சை ஆவணங்களை வாங்க சென்றவர் எப்படி எரிந்த நிலையில் இறந்துகிடந்தார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்ப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து அதன் அடிப்ப டையில் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் முக்கிய நபர் ஒருவரை தேடினர். இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் போலீஸ்காரர் மலையரசனை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் என்பவரை போலீசார் சுற்றிவளைத்தனர். மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் வைத்து மூவேந்திரனை கைது செய்ய முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். 

இதையடுத்து மூவேந்திரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல் கையில் வெட்டுக்காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிக்கண்ணனும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

இதற்கிடையே மூவேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 18-ந்தேதி மனைவியின் சிகிச்சை ஆவணங்களை வாங்குவதற்காக அழகாபுரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ்காரர் மலையரசன் வந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே வந்தபோது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரால் வாகனத்தை ஓட்ட முடியாததால் மாட்டுத்தாவணி இருசக்கர வாகன காப்பகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆட்டோவை பிடித்துள்ளார். அந்த ஆட்டோ டிரைவரான அவனியாபுரத்தை சேர்ந்த மூவேந்திரன் என்பவருடன் அவரது நண்பர் ஒருவரும் வந்துள்ளார். பின்னர் அவர்கள் பாண்டிகோவில் அருகிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மீண்டும் மதுவாங்கி ஆட்டோவில் அமர்ந்தவாறு அருந்தியுள்ளனர். 

போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ்காரர் மலையரசன், ஆட்டோ டிரைவரான மூவேந்திரனிடம் தனது குடும்ப விஷயம் குறித்து கூறியுள்ளார். தனது மனைவி விபத்தில் இறந்துவிட்ட தகவலையும் அவரிடம் தெரிவித்து உள்ளார். அப்போது தன்னுடை வங்கிக்கணக்கில் ரூ.80 ஆயிரம் பணம் இருப்பதாகவும், அதன் பாஸ்வேர்டையும் மூவேந்திரனிடம் பகிர்ந்துள்ளார். அந்த சமயம் மூவேந்திரன், தான் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்து தவிப்பதாகவும், குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாகவும் தெரிவித்ததையடுத்து இருவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தனர்.

சற்றே நிதானம் இழந்த நிலையில் போலீஸ்காரர் மலையரசின் செல்போனை வாங்கிய மூவேந்திரன், அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை அவருக்கே தெரியாமல் தனது நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துஉள்ளார். இதனை கண்டுபிடித்தால் சிக்கலாகி விடும் என்பதால் போலீஸ்காரரை தீர்த்துக் கட்ட மூவேந்திரன் முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த மூவேந்திரனின் நண்பர் பாதியிலேயே ஆட்டோவில் இருந்து இறங்கிக்கொண்டார்.

பின்னர் வழியில் ஒரு பங்க்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு சம்பவம் நடந்த ஈச்சனோடை புதுக்குளம் கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இரும்பு கம்பியால் போலீஸ்காரர் மலையரசனை தலையில் பலமாக தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார். குற்றுயிரும், கொலையுயிருமாக உயிருக்கு போராடிய போலீஸ் காரரை ஈவு இரக்கமின்றி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொடூரமாக கொலை செய்த மூவேந்திரன் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வீட்டிற்கு தப்பிச்சென்றுள் ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சரித்திர குற்றப்பதிவேடு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் தற்போது மதுரையில் போலீஸ்காரரை எரித்துக்ெகான்ற ஆட்டோ டிரைவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Mar 26, 2025 - 09:58:53 AM | Posted IP 162.1*****

குற்றவாளிகளை உருப்படியாக தூக்குத் தண்டனை கொடுங்க அப்போதுதான் திருந்துவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory