» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது

செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

கோவை அருகே லாரி நிறுத்தும் தகராறில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த தூத்துக்குடியை சேர்ந்த காசாளரை அடித்துக்கொன்ற லாரி டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்தவர் காளிமுத்து (47). இவருக்கு 2 மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தில் தங்கி இருந்து கிட்டாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் காசாளராக காளிமுத்து வேலை பார்த்து வந்தார். இதே பெட்ரோல் பங்க்கில் காளிமுத்துவின் தம்பி நாராயணனும் வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் பெட்ரோல் பங்க் அருகே ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பொருட்கள் ஏற்ற தூத்துக்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(31) ஓட்டி வந்தார். தூத்துக்குடியை சேர்ந்த சரவணகுமார்(26) என்பவர் மாற்று டிரைவராக இருந்தார். 

கிட்டாம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்ததும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்த மாரிமுத்து முடிவு செய்தார். அவர் லாரியை அங்கு நிறுத்துவதற்காக திருப்ப முயன்றார். அப்போது அந்த லாரி பங்க்கில் உள்ள பெட்ரோல் போடும் பம்ப்பில் இடிப்பது போன்று வந்ததாக தெரிகிறது. இதை பார்த்த பெட்ரோல் பங்க் காசாளரான காளிமுத்து, மாரிமுத்துவை பார்த்து ஏன் இப்படி வேகமாக லாரியை ஓட்டி வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்படி மாரிமுத்துவும், சரவணகுமாரும் பெட்ரோல் பங்க்கில் இருந்து சிறிது தூரம் சென்று லாரியை நிறுத்தி ஓய்வு எடுத்தனர்.

ஆனால் இரவு 12 மணிக்கு மேல் அந்த லாரி டிரைவரான மாரிமுத்துவும், சரவணகுமாரும் மீண்டும் அந்த பெட்ரோல் பங்க்குக்கு வந்தனர். அவர்கள் கையில் இரும்பு கம்பி இருந்தது. அப்போது காளிமுத்து அங்குள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் காளிமுத்துவின் தம்பி நாராயணன் கழிவறைக்கு சென்று இருந்ததாக கூறப்படுகிறது.

லாரி டிரைவர்கள் மாரிமுத்து, சரவணகுமாரும் தூங்கிக்கொண்டு இருந்த காளிமுத்துவை எழுப்பினர். அவர் எழுந்ததும், ஏன் எங்களிடமே தகராறு செய்கிறாய்?, இப்போது பேசு பார்க்கலாம்? என்று கூறினர். மேலும் தங்கள் கையில் இருந்த இரும்பு கம்பியால் காளிமுத்துவின் தலையில் ஓங்கி அடித்தனர். அதில் அவர் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

மேலும் ஆத்திரம் தீராமல் அவர்கள் அந்த பெட்ரோல் பங்க்கில் உள்ள கண்ணாடி கதவை அடித்து உடைத்தனர். சத்தம் கேட்டு கழிவறை சென்ற நாராயணன் வெளியே வந்தபோது ரத்த வெள்ளத்தில் காளிமுத்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாராயணனை பார்த்ததும் காளிமுத்துவை அடித்துக்கொன்ற 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் தப்பி ஓடிய 2 பேரையும் பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் 2 பேரும், அங்கிருந்து தப்பி ஓடினர். அந்தப்பகுதியில் உள்ள ஒரு தரைப்பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் மாரிமுத்து, சரவணகுமார் ஆகியோரின் வலது கை முறிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory