» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வு!

திங்கள் 31, மார்ச் 2025 8:21:54 AM (IST)

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிவிட்டது. குறிப்பாக கடந்த 27-ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

கடந்த 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வெப்பம் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படியே வெயில் சுட்டெரித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

வறண்ட வானிலை நிலவுவதாலும், மழைக்கான வாய்ப்பு துளியும் இல்லாததாலும் மேற்சொன்ன நாட்களில் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதிலும், குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், கரூர், சேலம், தர்மபுரி, திருச்சி, ஈரோடு, மதுரை போன்ற பகுதிகளில் 104 டிகிரி (40 செல்சியஸ்) வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதுதவிர, கடலோர மாவட்டங்களில் 100 டிகிரியை தொட்டும், உள்மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரையிலும் வெப்பம் பதிவாகக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நிறைவு பெற்றுவிட்டது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 28-ந் தேதி தொடங்கியது. வருகிற 15-ந் தேதியுடன் இந்த தேர்வு நிறைவு பெறும்.  இதுதவிர 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு அடுத்த மாதம் தொடங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 9-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை வருகிற 8-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையிலும் நடைபெறும் என முதலில் அட்டவணை வெளியிடப்பட்டது. வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்கவும் கோரிக்கை எழுந்தது.

இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்காவது தேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டு்ம் என்று பெற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின்படியும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை முன்கூட்டியே தேர்வு நடத்தி முடிக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கு 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையிலும், 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும் தேர்வு நடக்க இருக்கிறது. 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி 7-ந் தேதி - தமிழ், 8-ந் தேதி - விருப்ப மொழி, 9-ந் தேதி - ஆங்கிலம், 11-ந் தேதி - கணக்கு ஆகிய தேர்வுகள் நடக்க இருக்கிறது.

4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. அதன்படி 7-ந் தேதி - தமிழ், 8-ந் தேதி - விருப்பமொழி, 9-ந் தேதி - ஆங்கிலம், 11-ந் தேதி - கணக்கு, 15-ந் தேதி - அறிவியல், 17-ந் தேதி - சமூக அறிவியல் பாடத்துக்கு தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்ததும் அந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை பின்னர் தெரிவிக்கும் என அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory