» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கியில் கொள்ளையடித்த அண்ணன், தம்பி கைது : கிணற்றில் பதுக்கிய ரூ.13 கோடி நகைகள் மீட்பு!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:59:22 AM (IST)



கர்நாடகத்தில் வங்கி கொள்ளை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணன்-தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டியில் கிணற்றில் பதுக்கிவைத்திருந்த ரூ.13 கோடி தங்க நகைகள் மீட்கப்பட்டன.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதி டவுன் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி இந்த வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ 750 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் கடந்த 6 மாதங்களாக துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர்.

இந்தநிலையில், கொள்ளை நடந்தபோது நியாமதியில் இருந்த ஒரு பேக்கரி மட்டும் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கடை உரிமையாளரான விஜய்குமார் (வயது30) என்பவர் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அவரது தம்பி அஜய்குமார் (28) உள்பட 6 பேர் வங்கி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கைதான விஜய்குமார், அஜய்குமார் இருவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விஜய்குமார், அஜய் குமார் நியாமதியில் பேக்கரி நடத்தி வந்தனர். மற்ற 4 பேரும் கூலி வேலை பார்த்து வந்தனர். விஜய்குமார் ஏற்கனவே 2 முறை அந்த வங்கிக்கு சென்று கடன் கேட்டுள்ளார்.

ஆனால் வங்கி நிர்வாகம் கடன் கொடுக்க மறுத்துள்ளது. இதனால் கோபம் அடைந்த வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். இதற்காக தனது தம்பி மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த கூலி தொழி லாளர்களின் உதவியை நாடினார். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். 6 பேரும் யூ-டியூப்பில் கொள்ளையடிப்பது எப்படி என்பது குறித்த வீடியோவை 2 மாதங்களாக பார்த்து திட்டம் வகுத்துள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று 6 பேரும் வங்கிக்குள் நுழைந்து ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ 750 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து விஜய்குமாரின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் உள்ள தோட்டத்தில் இருக்கும் 30 அடி ஆழ கிணற்றில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உசிலம்பட்டி வந்து தங்க நகைகளை மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory