» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியாக உள்ளதா? ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் ஆய்வு!

செவ்வாய் 6, மே 2025 5:02:01 PM (IST)


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கல்வி நிறுவன வாகனங்கள் பொதுச்சாலைகளில் இயக்க தகுதி வாய்ந்ததாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆய்வு செய்தார்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் இன்று (06.05.2025) பள்ளி மாணவ, மாணவியர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் பொதுச்சாலைகளில் இயக்க தகுதி வாய்ந்ததாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்: பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகளின்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து பள்ளி வாகனங்களைக் கூட்டாய்வு செய்து வருகிறார்கள்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைச் சேர்ந்த அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில், இன்று முதற்கட்டமாக, தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைகுட்பட்ட 67 பள்ளிகளைச் சேர்ந்த 213 வாகனங்களில் இன்று 141 வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இவ்வாகனங்கள் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி வாகனங்கள் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதி 2012-ன்படி பாதுகாப்பானதாகவும், சிறந்த முறையில் இயக்கக்கூடிய நிலையில் பள்ளி வாகனங்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டதில், 141 பள்ளி வாகனங்களில், 71 வாகனங்கள் முழுதகுதியுடையதாக இருந்தது. 

65 வாகனங்கள் சிறு சிறு குறைகள் உள்ள காரணத்தினால், நிராகரிக்கப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதில் 05 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்துசெய்யப்பட்டு, பழுதுகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்தி, தகுதிச்சான்றுகளை புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நலன்கருதி இந்த ஆய்வில் 16 விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, வாகனங்களின் தற்போதைய நிலை, தரம், குழந்தைகளின் பாதுகாப்பு, அரசு விதிமுறைகளின்படி வாகனங்கள் இயங்கப்படுவது, முதலுதவிப் பெட்டி மற்றும் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது குறித்தும், அவசரகால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுனர்களின் உரிமம், வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா, வாகனத்தின் உட்புறம், முன்புறம் மற்றும் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் வாகனத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், போதிய பராமரிப்பு உள்ளதா போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வாகனத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கக்கூடிய முக்கியமான பெறுப்பு ஒவ்வொரு நடத்துனருக்கும் உண்டு. பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக்கட்டுப்பாட்டுக் கருவியை அவ்வப்போது ஆய்வு செய்து, உரிய வேகத்தில் வாகனத்தை இயக்கவேண்டும். குறிப்பாக, அனைத்து கல்வி நிலைய வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆண் உதவியாளர் எந்தகாரணத்தைக்கொண்டு வாகனத்தில் இருக்கக்கூடாது. மீறும் பட்சத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீதும், வாகனத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

பள்ளி வாகனத்தில் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும். தற்காலிகமாக மாற்று நபர்களை வைத்து வாகனங்களை இயக்கக் கூடாது. மீறும் பட்சத்தில் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். எனவே, பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து சென்று வர வேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அறிவுறித்தினார்.

பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூலமாக வாகனத்தில் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய மீட்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளிகளில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ஆபத்து காலங்களில் செய்யப்படும் முதல் உதவிப் பயிற்சி, தூத்துக்குடி மாவட்ட 108 அவசர ஊர்தி அலுவலர்களால் செயல்முறை விளக்கம் நடத்தி காண்பிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

அதெல்லாம் இருக்கட்டும்மே 6, 2025 - 06:30:59 PM | Posted IP 162.1*****

ரோடு சரியா இருக்கா பாருங்க , சிமெண்ட் சாலையில் சிமெண்ட் கற்கள் பெயர்ந்து வருகிறது , சாலையில் மண் தேங்கி இருக்கு அது பெரிய ஆபத்து அதை கவனிக்க ஆள் இல்லை கவலையா இருக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory