» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் போதைப்பொருள், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:51:33 PM (IST)

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். ஆனால் அவரது அழைப்பை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின வாழ்த்து குறிப்பில் தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; "தமிழ் மொழியும், கலாசார மரபும் நமது தேசத்தின் பெருமைகள். தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் மரபின் மிகப்பெரிய அபிமானி நமது பிரதமர் நரேந்திர மோடி.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. வேலைவாய்ப்பு இன்றி வெறும் படிப்புச் சான்றிதழ்கள் பெற்றவர்களாக மாணவர்கள் வெளியேறுகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம் நடக்கிறது.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிக குற்றங்கள் நடக்கின்றன. நமது சகோதரிகளும், மகள்களும் வீட்டை விட்டு வெளியேற அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

ஏழைகளுக்கு எதிராக கல்வி மற்றும் சமூக பாகுபாடு நிலவுகிறது. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிறர் இடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதியாக மாறியுள்ளது.

பொதுப்பாதையை பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல் ரீதியாக தாக்கப்படுகிறார்கள். சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் ஆன பிறகும் பாகுபாடு நிலவுவது நாம் அவமானப்படக்கூடியது. வறுமை நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் மிகவும் சமரசம் செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

அன்புAug 14, 2025 - 07:25:43 PM | Posted IP 162.1*****

நீ தான் தைரியமான ஆளாச்சே ஏதாச்சு செய்ய வேண்டியது தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory