» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு!

சனி 13, செப்டம்பர் 2025 3:54:37 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி, சத்யா ரிசார்ட்டில் இன்று கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: இன்று உங்களுக்கு வழங்கபட்ட பயிற்சியில் நான் கலந்து கொண்ட பின்னர் நபார்டு எந்த அளவிற்கு நாட்டின் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. பல்வேறு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பது குறித்து காணொலி காட்சி வாயிலாக அறிந்து கொண்டேன். 

காலநிலை மாற்றம், நகர்ப்புற வளர்ச்சியின் மேம்பாட்டுக்கு உதவி செய்தல், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு தங்களது முயற்சியினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது மாவட்டத்திலும் நபார்டு சார்பாக பல புதிய முயற்சிகள் மற்றும் இங்கு இருக்கின்ற மக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இம்மாவட்டத்தின் பிரதிநிதியாக கேட்கிறேன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான பட்டியலிடப்பட்ட தேவைகளுக்கு நபார்டு உதவ வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்டவைகளுக்கு நபார்டு உறுதுணையாக இருந்த கொண்டிருக்கிறது.

மேலும், மாவட்டத்தில் உள்ள மிக பெரிய நிலபரப்பின் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அதேப்போல் இங்கு இருக்கின்ற மக்களின் வாழ்வில் சிறு வகையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும், இங்கு இருக்கின்ற அனைவரும் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்ற கனவுடன் இருப்பீர்கள். நமது தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனவுடன் மட்டுமில்லாமல், அந்த கனவுக்காக உழைக்கக்கூடிய மக்களாக இருக்கிறீர்கள். எனவே நபார்டு இங்குள்ள மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது:- கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை இந்நிகழ்ச்சியின் வாயிலாக நபார்டு வங்கி நாட்டின் வளர்ச்சியில் எந்த அளவிற்கு பங்கெடுக்கிறது? எவ்வளவு பெரிய திட்டங்களுக்கு உதவி செய்கிறது? காலத்திற்கேற்றவாறு தனியார் பங்களிப்பிற்பிக்கும் நபார்டு வங்கி உதவி செய்வது குறித்து அறிந்து கொண்டோம். 

நமது மாவட்டத்திலும் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்தல், சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய வகையில் தொழில் தொடங்குவதற்கு நபார்டு உதவி செய்யும் என்ற அடிப்படையில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம், இங்கு இருக்கின்றவர்கள் தேவைப் படுகின்றவர்களுக்கும் எடுத்துக்கூறி பயன்பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், நபார்டு டிஜிஎம் சுதிர், நபார்டு ஏஜிஎம் சுரேஷ் ராமலிங்கம், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory