» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது "கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த காற்றின் வாயிலாக மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் வீடுகள் இடிந்து, தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24.10.2025 அன்று மைலாறு 61.2 மில்லி மீட்டர், அருமனையில் 58.0 மில்லி மீட்டர், தடிக்காரண்கோணத்தில் 57.2 மில்லிமீட்டர் அளவில் அதிக மழை பொழிந்துள்ளதாக தானியங்கி மழைமானி மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. அதுபோன்று மாவட்டத்தில் சராசரியாக 34.65 மில்லி மீட்டர் மற்றும் பொதுவாக 41.98 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் நமது மாவட்டத்திற்கு 24.10.2025 முதல் 30.10.2025 வரை 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 24.10.2025 முதல் 28.10.2025 வரை மன்னர் வளைகுடா மற்றும் கொமோரின் பகுதிகளுக்கு அப்பால் தமிழ்நாடு கடற்கரை தெற்கு ஆந்திரப்பிரதேச கடற்கரை மற்றும் அதை சுற்றி மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1.10.2025 முதல் 24.10.2025 அன்று 23 வீடு சேதமடைந்துள்ளது. இதில் 20 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 வீடுகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது நீரில் மூழ்கிய வேளாண்பயிர்கள் 79.24 ஹெக்டெர்யாகும். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 12 மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தது. அதனை தீயணைப்பு துறையினரால் முறிந்த அனைத்த மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டுள்ளது.
1.10.2025 முதல் 24.10.2025 வரை 1 மின்கம்பம் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 48 அடி கொள்ளவு கொண்டது. தற்போதைய நீர் மட்டம் 43 அடி கனமழையின் காரணமாக 3955 கனஅடி நீர் அணைக்கு வரப்பெற்றுள்ளது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 77 அடி கொள்ளவு கொண்டது. தற்போதைய நீர் மட்டம் 71 அடி கனமழையின் காரணமாக 2811 கனஅடி நீர் அணைக்கு வரப்பெற்றுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் தங்கள் கட்டுமரம், மீன்பிடி படகு போன்றவற்றை பாதுகாப்பாக நிலை நிறுத்திடவும், கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு அவ்வப்போது உதவி இயக்குநர், மீன்வளத்துறை அவர்களால் வழங்கப்படும் எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தெள்ளாந்தி, உலக்கை அருவி, திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள், நீர்நிலைகள் மற்றும் லெமூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எவரும் குளிக்கவோ, பொழுது போக்கிற்காக செல்பி எடுக்க செல்லவேண்டாம். மேலும் குழித்துறை சப்பாத்து பாலத்தின் அருகில் செல்ல வேண்டாம்.
மேலும் இடி மற்றும் மின்னல்கள் ஏற்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும். தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் யாரும் செல்லவேண்டாம் அதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்த்திடுவோம். பொதுமக்கள் எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் தண்ணீர் தேங்கி இருந்தாலோ, மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்து போக்குவரத்து இடையூறாக இருந்தாலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தலோ வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் 24 மணி நேரமும் செயல்பட்டுவரும் பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறை 1077, 04652 231077, 9384056205 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வட்டார அளவிலான மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தொலைபேசி எண்-94450 00482, தோவாளை வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் தொலைபேசி எண் 94450 00391, கல்குளம் வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தொலைபேசி எண் 9442214997, விளவங்கோடு வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தொலைபேசி எண் 9445477848, கிள்ளியூர் வட்டத்திற்கு உதவி ஆணையர் ஆயம் தொலைபேசி எண் 9445074582, திருவட்டார் வட்டத்திற்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தொலைபேசி எண் 9445000483 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தேரேகால்புதூர் சடையன்குளத்தில் வினோத்குமார் என்பவரது வீட்டருகில் கழிவு நீர் வீட்டிற்குள் வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறைக்கு தகவல் வரப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக கழிவுநீர் ஓடையில் உள்ள அடைப்பு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து குளச்சல் பாலூர் பகுதியில் சாலையின் குறுக்கே மின்கம்பிகளின் மேல் விழுந்த புளியமரம் தீயணைப்பு பணியாளர்களால் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
அகஸ்தீஸ்வரம் வட்டம் வடக்குதாமரைகுளம்- பறக்கை செல்லும் பழையாறு பாலத்தில் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடிகளால் சூழப்பட்டிருந்ததால், தண்ணீர் தடுக்கப்பட்டு வடக்குதாமரைகுளம் ஊருக்குள் புகும் சூழ்நிலை ஏற்பட்டது. வடக்குதாமரைகுளம் ஊராட்சி நிருவாகத்தால் பொக்லைன்பயன்படுத்தி இரவோடு இரவாக அகற்றப்பட்டு தண்ணீர் விரைவாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து தோவாளை ஊராட்சிக்கு சொந்தமான கூட்டமைப்பு கட்டிட சுற்றுச்சுவர் நேற்று பெய்த மழையில் தண்ணீர் செல்லும் கால்வாயில் விழுந்தால் தண்ணீர் தேக்கி விட்டது. தற்போது ஊராட்சிமன்ற உதவியுடன் ஜேசிபி மூலமாக உடைந்த சுற்று சுவர் கற்கள் அகற்றப்பட்டது. இதனால் கால்வாயில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறையில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)

தூத்துக்குடியில் உலக நன்மைக்காக சிறப்பு துவா : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
சனி 25, அக்டோபர் 2025 4:56:22 PM (IST)

மின் வாரிய அலுவலகத்தில் திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி : கோவில்பட்டியில் பரபரப்பு!
சனி 25, அக்டோபர் 2025 4:50:15 PM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ்!
சனி 25, அக்டோபர் 2025 4:06:09 PM (IST)

பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ஆம் தேதி வெளியாகும் : அன்பில் மகேஸ் அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 4:00:16 PM (IST)




