» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்

திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை ஸ்டாலின் மாடல் திமுக அரசு குழிதோண்டி புதைத்துவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,

பாதிப்புக்குள்ளான அம்மாணவி, 3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக,

எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெருநகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.

விடியா திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர்.

விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory