» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மோசடி வழக்கில் சிறிய தொகைக்காக வங்கிக்கணக்கை ஒட்டுமொத்தமாக முடக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

ஞாயிறு 9, நவம்பர் 2025 9:18:45 AM (IST)

மோசடி தொகை எவ்வளவோ, அந்த தொகையை மட்டுமே முடக்கம் செய்ய வேண்டும். மாறாக சிறிய தொகைக்காக ஒட்டுமொத்தமாக வங்கிக்கணக்கை முடக்கக்கூடாது என்று போலீசாருக்கு உயர்நீதிமன்றம்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘வி-மார்ட் ரீடெய்ல் லிமிடெட்’ நிறுவனத்தின் வங்கிக்கணக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் முடக்கினர். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சென்னை ஐகோர்ட்டில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ‘வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் பண பரிவர்த்தனையை பெறுவதற்கு என்று எச்.டி.எப்.சி., வங்கியில் தனியாக ஒரு கணக்கு வைத்துள்ளோம். அதில் ரூ.75 கோடிக்கு மேல் உள்ளது. அந்த கணக்கை முன்னறிவிப்பு எதுவுமில்லாமல், போலீசார் முடக்கியுள்ளனர். ஏதாவது முறைகேடு பணம் வந்ததாக புகார் இருந்தால், புலன்விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியும், முடக்கத்தை போலீசார் நீக்கவில்லை'' என்று வாதிடப்பட்டது.

போலீஸ் தரப்பில், ‘மணிமாறன் என்பவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1.48 கோடி இழந்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த மோசடி புகாரில் மேற்கொண்ட விசாரணையில், ரூ.4,194 மனுதாரர் கணக்கிற்கு சென்றுள்ளது. அதுமட்டுமல்ல, மத்திய அரசின் தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் மனுதாரர் வங்கிக் கணக்குக்கு எதிராக 172 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால், வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

எச்.டி.எப்.சி., வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் செவனன் மோகன், ‘இதேபோன்ற வழக்கில், மோசடியாக வந்த பணம் எவ்வளவோ, அந்த தொகையை மட்டுமே முடக்கம் செய்யவேண்டும். ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்கை முடக்கக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகளுக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை பின்பற்றியிருந்தால், மனுதாரரின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டிருக்காது'' என்று வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘மோசடி பணத்தையும், கணக்கு முடக்கத்துக்கான காலத்தையும் குறிப்பிடாமல், வங்கிக் கணக்கை போலீசார் ஒட்டுமொத்தமாக முடக்கம் செய்தது, மனுதாரரின் வர்த்தகம் செய்யும் அடிப்படை உரிமையை மீறிய செயலாகும்.

அதுமட்டுமல்ல, ஒருவரது வாழ்வாதாரத்தை மீறும் செயலாகும். எனவே, மனுதாரரின் வங்கிக்கணக்கை முடக்கம் செய்த எச்.டி.எப்.சி. வங்கி நீக்கவேண்டும். அதேநேரம், ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 998 மட்டும் முடக்கம் செய்ய வேண்டும். மனுதாரரும், இந்த தொகையை வங்கிக் கணக்கில் பராமரிக்கவேண்டும்.

மேலும், ஒரு வங்கிக்கணக்கில் சந்தேகப்படும்படி ஏதாவது மோசடி பணம் வந்ததாக தெரியவந்தால், அந்த தொகையை மட்டுமே முடக்கம் செய்யவேண்டும். மாறாக சிறிய தொகைக்காக ஒட்டுமொத்த வங்கி கணக்கையும் முடக்கம் செய்யக்கூடாது'' என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory