» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கட்சி தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஆகவில்லை: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

ஞாயிறு 9, நவம்பர் 2025 9:28:06 AM (IST)



கட்சி தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஆகவில்லை என்றும், தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘தி.மு.க. 75 அறிவுத்திருவிழா' நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முற்போக்கு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டதுடன், இருவண்ணக் கொடிக்கு வயது 75 இரண்டு நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

பின்னர் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு தி.மு.க. 75' நூலை வெளியிட்டு அவர் பேசியதாவது: 1967-ல் முதல் மாநிலக்கட்சியாக ஆட்சியை பிடித்த தி.மு.க. வரலாற்றை, இன்று பல ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர். ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதல்-அமைச்சர் நான்தான் என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை.

இந்த வரலாறு தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். சில அறிவிலிகள் தி.மு.க.வைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வை போன்று வெற்றி பெற, உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான். இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது.

கொள்கைகளை கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக இருப்பதால், எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும், பெரிய தந்திரங்களைக் கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை. கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா? என்று முயற்சி செய்கிறார்கள். சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை (எஸ்.ஐ.ஆர்.) அவசரமாக நடத்துவதால், தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். அனைத்து அரசியல் கட்சிகளும் வேண்டாம் என்று சொல்லியும், ஏன் நடத்த வேண்டும்?. 

ஆனால் தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கிவிட்டது. இதற்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். போராடப் போகிறோம், போராடுவோம். போலி வாக்காளர்கள் இடம்பெறாமலும், உண்மையான நம்முடைய வாக்காளர்கள் விடுபடாமலும், யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்திருக்கும்போது எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது. 2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026-ல் மாபெரும் வெற்றியைப் பெறும். ‘திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்' பெரியார், அண்ணா, கருணாநிதி, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை, தமிழ்நாடு தலைகுனியாது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு எம்.பி., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory