» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக உரிமையை காப்பதில் தி.மு.க. அரசு தோல்வி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
வியாழன் 13, நவம்பர் 2025 4:25:24 PM (IST)
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக உரிமையை காப்பதில் தி.மு.க. அரசு தோல்வியடைந்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதன் மூலம் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டிய தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்து வைக்காததன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதில் படுதோல்வியடைந்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடக அரசு அதை கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பிய மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டது.
எனினும், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், விரிவான திட்ட அறிக்கை பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்படாமல் இருந்த நிலையில், அது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய மேலாண்மை ஆணையம், அந்த அறிக்கையையும் திருப்பி அனுப்பிவிட்டது.
இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து, மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று ஆணையிட்டனர்.
விரிவான திட்ட அறிக்கை குறித்து தமிழகத்தின் கருத்தைக் கேட்டுத் தான் முடிவெடுக்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், ஒருவேளை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டால் அப்போது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தை மேலும் ஓர் அடி கர்நாடகத்திற்கு சாதகமாக இந்தத் தீர்ப்பு மாற்றியிருக்கிறது. இந்த வழக்கில் வலிமையான வாதங்களை முன்வைக்கத் தமிழக அரசு தவறியது தான் இதற்கு காரணம் ஆகும். இதன் மூலம் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே முதல்மடை மாநிலமான கர்நாடகத்தில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்கக்கூடாது என்பது தான் 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு ஆகும். இந்தத் தீர்ப்பை 16.02.2018-ம் தேதியிட்ட தீர்ப்பில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இதன் பொருள் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை குறித்த விண்ணப்பத்தைக் கூட மத்திய அரசு பெறக்கூடாது என்பது தான். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி எனக்கு எழுதிய கடிதத்தில் உறுதி செய்திருந்தார். மேலும், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை குறித்த விண்ணப்பத்தை கர்நாடகம் தாக்கல் செய்தால் அது திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் கூறியிருந்தாது. இது தான் மிகவும் சரியான நிலைப்பாடு ஆகும்.
ஆனால், அந்த நிலைப்பாட்டுக்கு மாறாக மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததும், அதனடிப்படையில் கர்நாடக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியதும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செய்யப்பட்ட துரோகங்கள் ஆகும். இதை எதிர்த்து தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அழுத்தம் காரணமாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர்யாக இருந்த உமாபாரதி அளித்த வாக்குறுதி குறித்தும், அதை மீறி மேகதாது அணை குறித்த வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது சட்டவிரோதம் என்பதையும் உச்சநீதிமன்றத்தில் வலிமையாக வாதிட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிய தமிழக அரசு வழவழ வாதங்களை முன்வைத்ததும்தான் இன்றையத் தீர்ப்புக்கு காரணம்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய நீர்வள ஆணையமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையமோ விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளித்து விட்டால், மேகதாது அணையின் கட்டுமானப் பணிகளை கர்நாடக தொடங்கி விடும். அதற்கு வசதியாக இப்போதே தொடக்கப் பணிகளை செய்து வைத்திருக்கிறது. அதன் பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு மீண்டும் சென்று மேகதாது அணை கட்ட தடை வாங்குவதெல்லாம் குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்கு ஒப்பான செயல்தான்.
1970-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி ஆகிய அணைகளை கர்நாடக அரசு கட்டியதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தது அப்போதிருந்த தி.மு.க. அரசுதான். அதேபோல் தான் இப்போதுள்ள தி.மு.க. அரசும் மேகதாது அணையை கட்டுவதில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் வழக்கத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்து, மேகதாது அணை குறித்த வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையும், அதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையும் செல்லாது என அறிவிக்கக் கோர வேண்டும். இந்த முறையாவது வலிமையான வாதங்களை முன்வைத்து காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு காக்க வேண்டும்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நவ.15ல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல்: வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்!!
வியாழன் 13, நவம்பர் 2025 5:47:23 PM (IST)

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வியாழன் 13, நவம்பர் 2025 5:31:06 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

மேகதாது அணை: திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் - எடப்பாடி பழனிசாமி
வியாழன் 13, நவம்பர் 2025 4:14:45 PM (IST)

ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவுடன் கூட்டணியா? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:07:39 PM (IST)

தமிழகத்தில் நவ.17 முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும் - வானிலை ஆய்வு மையம்!
வியாழன் 13, நவம்பர் 2025 3:36:40 PM (IST)




