» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
புதன் 19, நவம்பர் 2025 4:11:19 PM (IST)
கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்.
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு மோடி வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் சுவாமிநாதன் பிரதமர் மோடியை வரவேற்றார் பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு வந்தார். அப்போது வழிநெடுக பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடைகின்றனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 837 பேர் பயன்பெறுகிறார்கள்.
முன்னதாக தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விவசாயிகள், 'மாட்டு வண்டி'யை நினைவுப் பரிசாக வழங்கினர்.
இதனிடையே, இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விருது வழங்கி கவுரவித்தார். அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். முன்னதாக, இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். பிரதமருடன் ஆர்வமாக விவசாயிகள் செல்பி எடுத்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர மாநாடு நடைபெறும் பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை-அவினாசி ரோட்டில் இருந்து கொடிசியா வளாகம் வரை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அசுத்தமான ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, நவம்பர் 2025 5:44:54 PM (IST)

தலைமுடி உதிர்வால் மன வேதனை: இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!
புதன் 19, நவம்பர் 2025 5:36:37 PM (IST)

அரையாண்டுத் தேர்வுகள் டிச.10ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு!
புதன் 19, நவம்பர் 2025 5:10:01 PM (IST)

நவ.22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
புதன் 19, நவம்பர் 2025 4:36:52 PM (IST)

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதன் 19, நவம்பர் 2025 3:30:29 PM (IST)

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியருக்கு வலை : தலைமை ஆசிரியர் மீதும் வழக்குப் பதிவு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 9:43:45 PM (IST)




