» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்ட வாக்காளர்களுக்கு இறுதிவாய்ப்பு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:30:38 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களுக்கு உதவி மையங்கள் செயல்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் கணக்கீட்டு படிவம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (21.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம் - 2026 ஆனது 01.01.2026-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளார்கள்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யும் பணி 04.11.2025 முதல் வீடு வீடாக சென்று 15,25,834 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளது தேதி வரை 95.79 சதவீதம் கணக்கீட்டு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (21.11.2025) பிற்பகல் 10.00 மணி வரை 7,57,788 கணக்கீட்டு படிவங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கணக்கீட்டு படிவங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் கணக்கீட்டு படிவம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேசிய ஆணையத்தால் வாக்காளர் ஒருவர் இந்தியாவில் ஏதேனும் ஒருதொகுதியில் மட்டுமே வாக்குரிமை பெற்றவர்களாக இருக்க முடியும் என அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட எல்லை பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் அல்லது அருகாமையில் உள்ள மாவட்டம் அல்லது மாநில எல்கைக்குட்பட்ட தொகுதி அல்லது இந்தியாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் வாக்காளர்களாக இடம்பெற வேண்டும். ஒருவருக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே வழங்கப்படும். எனவே வாக்காளர்களாகிய நீங்கள் எந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டுமென உறுதிசெய்து, கணக்கீட்டு படிவத்தினை பூர்த்திசெய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் இறுதி வாய்ப்பாக வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாங்கள் எப்போதும் வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் செயல்படும் உதவி மையங்களுக்கு நேரடியாக சென்று, அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) தாங்கள் பூர்த்தி செய்த தங்களது கணக்கீட்டு படிவத்தை திரும்ப வழங்கவேண்டும்.
எனவே, வாக்காளர்களாகிய உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி நீங்கள் பூர்த்தி செய்த உங்கள் கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். ஆய்வில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 3:55:20 PM (IST)

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:39:47 PM (IST)

உலக மீனவர் தினம்: கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறைபடுத்த மீனவர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, நவம்பர் 2025 12:36:39 PM (IST)

சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை!
வெள்ளி 21, நவம்பர் 2025 12:27:41 PM (IST)

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை : இன்ஸ்டா பிரபலம் உள்பட 6 பேர் கைது
வெள்ளி 21, நவம்பர் 2025 11:15:03 AM (IST)

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
வெள்ளி 21, நவம்பர் 2025 11:09:13 AM (IST)




