» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ளி 21, நவம்பர் 2025 3:55:20 PM (IST)

எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தவெக நிர்வாகிகளைக் கைது செய்தனர். இதனிடையே, தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில், அரசின் அடக்குமுறைக்கு எதிராக இலங்கை, நேபாளத்தில் நடந்ததுபோல தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னதாக, இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மனுதாரர், கடந்த செப். 29-ஆம் தேதி இரவு 11.28 மணிக்கு இட்ட பதிவை இரவு 12.02 மணிக்கு நீக்கிவிட்டார். சுமாா் 34 நிமிஷங்கள் இருந்த இப்பதிவை பொதுமக்கள் பலர் பாா்த்திருக்க வாய்ப்பில்லை. அந்தப் பதிவில் எந்த உள்நோக்கமும் இல்லை. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணைகூட நடத்தாமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று வாதிட்டார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, சமூக வலைதளத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு பின்னர் மனுதாரர் அந்தப் பதிவை நீக்கியதை ஒப்புக்கொள்கிறீா்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆம் என்று பதிலளித்த ஆதவ் அர்ஜுனா தரப்பு மூத்த வழக்கறிஞர், ஒருவேளை அந்தப் பதிவை நீக்கவில்லை என்றாலும் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை. ஆதவ் அர்ஜுனா குற்றப்பின்னணி கொண்டவர் அல்ல. எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் சில கருத்துகளை அவர் பதிவிட்டுள்ளார் என்று விளக்கம் அளித்தார்.

மேலும், உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை என்றும் உடனடியாக அப்பதிவு நீக்கப்பட்டுவிட்டது என்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, கரூரில் சம்பவத்துக்குப் பின், அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள மனுதாரர் தப்பி ஓடிவிட்டார். செப். 28-ஆம் தேதி எக்ஸ் தளத்தில் இப்படி ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்க போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரின் பதிவை ஒரு லட்சம் போ் வரை பாா்த்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியும் மனுதாரா் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று(நவ. 21) ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory