» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 40 சதவீதம் உயர்வு : விற்பனையாளர்கள் சங்கத்தினர் முடிவு

வியாழன் 29, ஜனவரி 2026 7:58:50 AM (IST)



மூலப்பொருளான நிலக்கடலை விலை அதிகரித்துள்ளதால் கோவில்பட்டி கடலை மிட்டாயின் விலையை 40 சதவீதம் உயர்த்த தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நலச் சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது கடலை மிட்டாய் விலையை 40 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

பின்னர், சங்கச் செயலர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்ததை அடுத்து, தற்போது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டியில் இத்தொழில் மூலம் பெண்கள் அதிக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கோவில்பட்டி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கடலைமிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20,000-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். மூலப்பொருளான நிலக்கடலையின் விலை சமீபகாலமாக உயர்ந்து வருகிறது. 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ. 14,500-ஆக உயர்ந்துள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், கடலை மிட்டாயின் விலையை 40 சதவீதம் உயர்த்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம், மொத்த விலையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 160-180 க்கு விற்பனையான நிலையில் இனி ரூ. 220க்கு விற்கப்படும். சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 200-220 க்கு விற்பனையான நிலையில், இனி ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 260 வரை விற்கப்படும். இந்த விலை உயர்வு புதன்கிழமை (ஜன.28) முதல் அமலுக்கு வரும்.

பல ஊர்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் பெயரில் உள்ளூர் கடலை மிட்டாய்களை விற்பனை செய்வதை அரசு தடுக்க வேண்டும். நிலக்கடலை விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory