» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பீகார் வாலிபர், மனைவி, குழந்தையோடு கொலை : நண்பர்களே தீர்த்துக்கட்டிய கொடூரம்!

வியாழன் 29, ஜனவரி 2026 8:27:26 AM (IST)

சென்னைக்கு வேலைதேடி வந்த பீகார் வாலிபர், மனைவி, குழந்தையோடு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடையாறு இந்திரா நகர் 1-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கீழே கடந்த 25-ந்தேதி அதிகாலை சாக்கு மூட்டைக்குள் வாலிபர் ஒருவர் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிணத்தை கைப்பற்றி அடையாறு உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் இளங்கனி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஸ்கூட்டரில் வந்த 2 நபர்கள் சாக்கு மூட்டையில் பிணத்தை வீசி சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதை வைத்து 2 நபர்கள் சாக்கு மூட்டையில் பிணமாக இருந்த வாலிபரை படுகொலை செய்து, பிணத்தை வீசி சென்றது உறுதியானது. 3 தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபரின் சட்டைப்பைக்குள் அடையாறில் செயல்படும் தனியார் ‘செக்யூரிட்டி' நிறுவனத்தின் தொலைபேசி எண் எழுதப்பட்ட காகிதம் ஒன்று இருந்தது. அதை வைத்து குறிப்பிட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரித்தபோது கொலை செய்யப்பட்டவர் யார் என்பது தெரியவந்தது.

அவரது பெயர் கவுரவ் குமார் (24) என்பதும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது. குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கொலை செய்யப்பட்ட கவுரவ் குமார் வேலை தேடி சென்றது தெரியவந்தது. மேலும், கவுரவ்குமாருடன் அவரது மனைவி முனித குமாரியும் (20), 2 வயது மகன் பிரம்மினி குமார் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

கவுரவ் குமார் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டுவிட்டார். அவருடன் வந்த மனைவியும், குழந்தையும் எங்கே? என்று அடுத்தக்கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அடையாறில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்யும் பீகாரைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்பவர் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கினார்.

விசாரணையில் கவுரவ் குமார் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முதலில் காவலாளியாக வேலை பார்த்ததாகவும், பின்னர் அந்த வேலை பறிபோய் விட்டதாகவும், இதனால் கவுரவ் குமார் பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு போய்விட்டதாகவும் தெரியவந்தது. கிருஷ்ணபிரசாத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளார்.

அவரது ஆலோசனையின்பேரில், கவுரவ் குமார் கடந்த 21-ந்தேதியன்று தனது மனைவி, மகனுடன் ரெயிலில் சென்னைக்கு வந்துள்ளார். சென்னைக்கு வந்து கிருஷ்ணபிரசாத்தை சந்தித்துள்ளார். பின்னர், அடையாறில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சென்று வேலை கேட்டுள்ளார். அங்கு வேலை கிடைக்காததால், கவுரவ் குமார் மனைவி, குழந்தையுடன் கிருஷ்ணபிரசாத்தை மீண்டும் சந்தித்துள்ளார்.

அன்றையதினம் இரவு கிருஷ்ணபிரசாத் அடையாறு காந்தி நகரில் உள்ள தான் தங்கி இருக்கும் வீட்டில் தங்கவைத்துள்ளார். மறுநாள் கவுரவ் குமாரையும், அவரது மனைவி, குழந்தையையும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர் என்பவரை போய் பாருங்கள். அவர் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்வார் என்று அனுப்பி வைத்துள்ளார். சிக்கந்தர் தரமணி மத்திய பால்டெக்னிக்கில் காவலாளியாக வேலை பார்த்ததாக தெரிகிறது. 22-ந்தேதி சிக்கந்தரை பார்க்க முடியவில்லை. இதனால் அன்றையதினம் இரவு அடையாறு பகுதியில் பிளாட்பாரத்தில் குடும்பத்துடன் கவுரவ் குமார் படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் சிக்கந்தரை கவுரவ் குமார் போய் பார்த்தார்.

அவர் பால்டெக்னிக் வளாகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் கவுரவ் குமாரையும், அவரது மனைவி மற்றும் குழந்தையையும் தங்கவைத்தார். சிக்கந்தரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். வேலை கிடைக்கும் வரை அங்கேயே தங்கியிருக்குமாறு அடைக்கலம் கொடுத்தார்.

இதற்கிடையே கடந்த 24-ந்தேதி மதியம் சிக்கந்தர் தனது நண்பர்கள் இருவரோடு கவுரவ்குமார் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார். நண்பர்களோடு சிக்கந்தர் மது அருந்தினார். அப்போது சிக்கந்தர் கவுரவ்குமாரின் மனைவியை சில்மிஷம் செய்தார். ஆனால் அவர் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டார்.கவுரவ் குமார் தனது மனைவியோடு சேர்ந்து அந்த காம கொடூரர்களோடு கடும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது ஆசை நிறைவேறாததால் சிக்கந்தர் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் வெறியோடு கவுரவ் குமாரையும், அவரது மனைவியையும் கொடூரமாக தாக்கினார். அவரது நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். 3 பேரும் நடத்திய தாக்குதலால் கணவனும், மனைவியும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்கள்.

கற்பை காக்க போராடிய அந்த யுத்தத்தில் கவுரவ் குமாரும், அவருடைய மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். கதறி அழுத சிறுவனையும் சிக்கந்தரும், அவரது நண்பர்களும் தீர்த்து கட்டினார்கள்.

பின்னர் பிணங்களை தனித்தனி சாக்கு மூட்டையில் கட்டினார்கள். 25-ந்தேதி அதிகாலையில் சிறுவனின் பிணம் உள்ள சாக்கு மூட்டையை மத்திய கைலாஸ் ரெயில் நிலையம் அருகில் ஓடும் கழிவுநீர் கால்வாய்க்குள் வீசினார்கள். அடுத்து கவுரவ் குமாரின் மனைவியின் பிணம் உள்ள சாக்கு மூட்டையை பெருங்குடியில் உள்ள குப்பை மேட்டிற்கு எடுத்து சென்று வீசினார்கள்.

3-வதாக கவுரவ் குமாரின் உடல் உள்ள சாக்கு மூட்டையை ஸ்கூட்டரில் தூக்கி சென்றனர். பிணத்தை திருவான்மியூர் கடலில் வீச கொண்டு சென்றனர். ஆனால் இந்திரா நகர் 1-வது அவென்யூவில் போகும்போது பிணம் உள்ள சாக்குமூட்டை கீழே விழுந்துவிட்டது. மீண்டும் அதை தூக்க முடியாமல் அங்கேயே போட்டுவிட்டு சிக்கந்தர் தனது நண்பர்களோடு தப்பி சென்றுவிட்டார்.

தனிப்படை போலீசார் சிறுவனின் உடலை கழிவுநீர் கால்வாயில் இருந்து நேற்று மீட்டனர். கவுரவ் குமாரின் மனைவியின் உடல் பெருங்குடி குப்பை மேட்டில் நேற்று மாலை வரையில் கண்டெடுக்க முடியவில்லை. குப்பைமேட்டில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டதால், குப்பைக்குள் பிணம் சிக்கிக்கொண்டது. பிணத்தை தொடர்ந்து தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

சிக்கந்தரும் அவரது நண்பர்கள் நரேந்திர குமார் (45), ரவீந்திரநாத் தாகூர் (45), விகாஷ் (24) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிக்கந்தர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் மேற்கண்ட தகவல்களை சேகரித்து போலீசார் வெளியிட்டனர்.கவுரவ் குமாரின் உடலும், அவரது குழந்தையின் உடலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

பீகார் மாநிலத்தில் இருந்து அவர்களது உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கணவன், மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற கொலையாளிகள், 2 வயது குழந்தையை கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி பின்னர் தலையை சுவரில் அடித்து மிகவும் கோரமாக கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலையாளி சிக்கந்தர் கொடுத்த வாக்கு மூலத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

கவுரவ் குமாரின் மனைவி மீது ஏற்பட்ட ஆசையால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக சிக்கந்தர் தனது வாக்குமூலத்தில் மேலும் கூறியுள்ளார். சிக்கந்தருக்கு சந்தோஷ் என்ற பெயர் உள்பட மேலும் இரண்டு பெயர்கள் உள்ளதாக போலீசார் கூறினார்கள்.

விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவர்களை அடையாளம் கண்டும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்தும் சாதனை செய்த தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory